2 நாளில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி மனு
2 நாளில் ஓட்டுப்பதிவு சதவீதத்தை வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி மனு
ADDED : மே 11, 2024 12:53 AM
புதுடில்லி, நடப்பு லோக்சபா தேர்தலில், ஒவ்வொரு கட்ட ஓட்டுப்பதிவு முடிந்த 48 மணி நேரத்துக்குள், ஓட்டுச்சாவடி வாரியாக ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்த தகவல்களை வெளியிட, தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி, ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
நாடு முழுதும் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கிறது.
வித்தியாசம்
மூன்று கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், நாளை நான்காம் கட்ட தேர்தல் நடக்கிறது. ஒவ்வொரு கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்த தகவல்களை தேர்தல் கமிஷன் வெளியிட்டது.
இதில் அடிக்கடி திருத்தம் செய்து, தேர்தல் கமிஷன் அறிக்கை வெளியிட்டதை, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்தன.
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் அரசு சாரா அமைப்பான ஏ.டி.ஆர்., நேற்று தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:
ஏப்., 19ல் முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுப்பதிவு சதவீதம் குறித்த தகவலை, 11 நாட்கள் கழித்து, ஏப்., 30ல் தேர்தல் கமிஷன் வெளியிட்டது. அதே போல், ஏப்., 26ல் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலில் பதிவான ஓட்டுப்பதிவு சதவீதமும் நான்கு நாட்களுக்கு பின்னரே வெளியிடப்பட்டது.
எனினும், ஓட்டுப்பதிவு நிறைவடைந்த போது வெளியான சதவீதத்துக்கும், தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு சதவீதத்திற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.
விசாரணை
ஓட்டுப்பதிவு குறித்த தகவல்களை வெளியிட தேர்தல் கமிஷன் தாமதம் செய்வது, மக்கள் மத்தியில் சந்தேகத்தை எழுப்பி உள்ளது.
எனவே, ஒவ்வொரு கட்ட தேர்தலிலும் ஓட்டுப்பதிவு முடிந்த 48 மணி நேரத்துக்குள், ஓட்டுச்சாவடி வாரியாக மற்றும் தொகுதி வாரியாக ஓட்டுப்பதிவு சதவீதத்தை பொது வெளியில் வெளியிட தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கூறப்படுகிறது.