ADDED : செப் 05, 2024 09:11 PM
சண்டிகர்:பஞ்சாபில், பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை உயர்த்த அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 61 பைசா, டீசலுக்கு 92 பைசா வரியை உயர்த்த முடிவு செய்துள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் சண்டிகரில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்குப் பின், நிதியமைச்சர் ஹர்பால் சிங் சீமா கூறியதாவது:
பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரியை உயர்த்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெட்ரோல் மீதான வாட் வரி ஒரு லிட்டருக்கு 61 பைசாவும், டீசலுக்கு 92 பைசாவும் உயர்த்தப்படும். எரிபொருள் மீதான வாட் வரி உயர்வால் டீசல் மூலம் 395 கோடி ரூபாயும், பெட்ரோல் மூலம் 150 கோடி ரூபாயும் அதிகமாக வருவாய் அரசுக்கு கிடைக்கும்.
கடந்த 2021, ஆண்டு நவம்பரில், அப்போதைய சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் அரசு, 7 கிலோ வாட் வரை சுமை கொண்ட மின்நுகர்வோருக்கான மின் கட்டணம் யூனிட்டுக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. காங்கிரஸ் அரசின் இந்த முடிவை திரும்பப் பெறவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திரும்ப பெறப்படுகிறது. அதேநேரத்தில், மாதந்தோறும் வழங்கப்படும் 300 யூனிட் இலவச மின்சாரம் தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பஞ்சாப் மாநில பெட்ரோல் பங்க் டீலர்கள் சங்க செய்தித் தொடர்பாளர் மான்டி சேகல், “எரிபொருள் மீதான வாட் வரி உயர்வால், எல்லையோர மாவட்டங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை கடுமையாகப் பாதிக்கப்படும். எரிபொருள் விலை குறைவாக உள்ள அண்டை மாநிலங்களில் விற்பனை அதிகரிக்கும்,”என்றார்.
மொஹாலியைச் சேர்ந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் அஷ்விந்தர் சிங் மோங்கியா, “அரசின் இந்த நடவடிக்கையால் பெட்ரோல் மற்றும் டீசல் கடத்தல் அதிகரிக்கும். இதனால், மாநிலத்தின் வரி வருவாய் கடுமையாக குறையும். பஞ்சாபை விட ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு - காஷ்மீர் மாநிலங்களில் எரிபொருள் விலை மிகவும் குறைவு,”என்றார்.
மொஹாலியில் தற்போது பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 97.01 ரூபாயாகவும், டீசல் 87.21 ரூபாயாகவும் உள்ளது. சண்டிகரை விட பஞ்சாபில் எரிபொருள் விலை சற்று அதிகம்.
யூனியன் பிரதேசமான சண்டிகரில் பெட்ரோல் - 94.24, டீசல் - 82.40க்கு விற்கப்படுகிறது.
பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு பஞ்சாபில் பொறுப்பேற்ற கடந்த இரண்டரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.