மருந்து தொழிற்சாலையில் தீ: ஆந்திராவில் 17 பேர் பலி
மருந்து தொழிற்சாலையில் தீ: ஆந்திராவில் 17 பேர் பலி
ADDED : ஆக 22, 2024 02:01 AM

அமராவதி,
ஆந்திராவில், மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 17 பேர் உயிரிழந்தனர்; 33 பேர் படுகாயமடைந்தனர்.
ஆந்திராவில் அனஹாபள்ளி மாவட்டத்தின் அச்சுதாபுரத்தில் உள்ள தொழிற்பேட்டையில், 'எஸ்சென்ஷியா அட்வான்ஸ்டு சயின்சஸ்' என்ற மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 350க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
நேற்று மதிய உணவு இடைவேளையின்போது தொழிற்சாலையில் உள்ள பாய்லர் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. அப்போது அருகில் உள்ள மின் சாதனங்களில் தீப்பிடித்து மற்ற இடங்களுக்கும் வேகமாக பரவியுள்ளது. இதில், 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் சிக்கி உள்ளனர்.
தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், ஆறு தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் சிக்கிய 17 பேர் உயிரிழந்தனர்; 33 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு நேரில் சென்ற கலெக்டர் விஜயகிருஷ்ணன், மீட்புப் பணிகளை துரிதப்படுத்தினார். இந்த விபத்து குறித்து அவர் கூறுகையில், “மருந்து தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்திற்கு மின் கசிவு காரணமாக இருக்கும் என சந்தேகிக்கிறோம். எனினும், இந்த விபத்து குறித்து உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
''மதிய உணவு இடைவேளையின்போது விபத்து ஏற்பட்டதால், குறைவான ஊழியர்களே தொழிற்சாலைக்குள் இருந்தனர். இதன் காரணமாக, பலி எண்ணிக்கையும் பெருமளவு குறைந்துள்ளது,” என்றார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதுடன், காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.