திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: கோபுர தரிசனத்துடன் திரும்பும் பக்தர்கள்
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்: கோபுர தரிசனத்துடன் திரும்பும் பக்தர்கள்
ADDED : மே 19, 2024 01:12 AM

கோடை விடுமுறையை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தினமும் பல்லாயிரக்கணக்கானோர் படையெடுக்கின்றனர். இலவச தரிசனத்திற்கு,'கியூ காம்ப்ளக்சில்' இருந்து, 5 கி.மீ., துாரம் வரை பக்தர்கள் கூட்டம் வரிசைகட்டி நிற்கிறது. இதனால், ஆயிரக்கணக்கானோர் கோபுர தரிசனம் மட்டும் செய்து விட்டு, லட்டுடன் ஊர் திரும்புகின்றனர்.
திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவிலில், தேவஸ்தானத்தால் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அதிகாலை முதல் சுப்ரபாதம், சகஸ்ரநாம அர்ச்சனை, ஆர்ஜித வசந்தோற்சவம், தோமாலை சேவை,
நித்ய கல்யாண உற்சவம், சகஸ்ர தீப அலங்காரம், டோலோற்சவம் என, தினசரி பல சேவைகள் நடத்தப்படுகின்றன. இதற்கான குறிப்பிட்ட அளவு டிக்கெட்டுகள், 'ஆன்-லைன்' வாயிலாக முன்பதிவு செய்யப்படுகின்றன.
32,000 டிக்கெட்
உலகம் முழுதும் இருந்து பக்தர்கள் உரிய நேரத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, 300 ரூபாய் கட்டணம் உடைய சிறப்பு டிக்கெட்டுகள் இரண்டு மாதங்களுக்கு முன் முன்பதிவு செய்யப்படுகின்றன. இந்த வகையில், நாள் ஒன்றுக்கு, 32,000 டிக்கெட்டுகள் வரை விற்பனை செய்யப்படுகின்றன.
திருப்பதி அலிபிரி, சந்திரகிரி, ஸ்ரீவாரிமெட்டு வழியாக படியேறி நடந்து செல்லும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு நடுவழியில் தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. மேலும், திருப்பதியில் இலவச தரிசனத்திற்கான டோக்கன் ஒரு நாள் முன்பாக வழங்கப்படுகிறது.
மூத்த குடிமக்களுக்கு சிறப்பு தரிசன வழித்தடமும் அமைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் வசதிக்காக ஸ்ரீவாணி டிரஸ்ட் சார்பில் தினசரி, 1,000 டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு டிக்கெட்டின் விலை 10,500 ரூபாய்.
இது இல்லாமல் தேவஸ்தான அதிகாரிகள் கோட்டாவில், தினமும் 1,000 எண்ணிக்கையில், சிறப்பு தரிசன டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் நாள் ஒன்றுக்கு, அதிகபட்டமாக, 75,000 டிக்கெட்டுகள் வரை தரிசனத்திற்கு வழங்கப்படுகின்றன.
பக்தர்கள் அனைவரும் வைகுண்டம், 'கியூ காம்பிளக்ஸ்' வழியாக தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். கோவிலுக்கு வரும் கூட்டத்திற்கு ஏற்றபடி அறைகளில் தங்கவைத்து அனுப்பப்படுகின்றனர். அவ்வாறு தங்க வைக்கப்படுபவர்களுக்கு உரிய நேரத்தில் உணவு, பால், காபி வழங்கப்படுகிறது.
திருப்பதி கோவில் தரிசனத்திற்கு உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் ஹிந்துக்கள் வந்து செல்கின்றனர். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களை சேர்ந்தவர்களும் முன்பதிவு செய்து வருகின்றனர்.
தமிழர்கள் அதிகம்
இதில், தமிழகத்தில் இருந்து செல்பவர்கள், 60 சதவீதம் பேர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடை விடுமுறை முன்னிட்டு, மார்ச் மாதமே தரிசனத்திற்கு முன்பதிவு செய்தவர்கள் வந்து செல்லும் நிலையில், முன்பதிவு செய்யாமல் தினமும் பல்லாயிரக்கணக்கானோர் திருப்பதிக்கு செல்கின்றனர். இதனால், நாளுக்கு நாள் திருமலையில் கூட்டம் கட்டுக்கடங்காமல் செல்கிறது.
நேற்று முன்தினம் இலவச தரிசனத்திற்கான கூட்டம் வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் இருந்து, 5 கி.மீ., துாரம் வரை நீண்டு சென்றது. ஏழுமலையானை, தர்ம தரிசனத்தில் பக்தர்கள் தரிசிக்க, 30 மணி நேரத்திற்கு மேலாகிறது. அன்று ஒரே நாளில், 73,000 பேர் தரிசித்துள்ளனர். உண்டியலில், 3.60 கோடி ரூபாய் வசூலானது.
திருப்பதியில் கூட்டத்தையும், தரிசன நேரத்தையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோபுர தரிசனம் செய்து, லட்டு பிரசாதம் பெற்று ஊர் திரும்புகின்றனர்- -நமது நிருபர்- -.

