ADDED : மே 17, 2024 11:20 PM
புனே: மஹாராஷ்டிரா மாநிலம் புனே விமான நிலையத்தில் இருந்து, நேற்று மாலை 180 பயணியருடன், ஏர் இந்தியா விமானம் டில்லி புறப்பட தயாரானது. இதற்காக ஓடுபாதைக்கு வந்து கொண்டிருந்தது.
அப்போது பயணியரின் உடைமைகளை எடுத்துச் செல்லும் வாகனம் ஓடுபாதையை கடந்து சென்றது. இந்த வாகனத்தின் மீது, ஏர் இந்தியா விமானத்தின் முகப்பு பகுதி மோதியது. இதில் விமானத்தின் முன் பகுதி மற்றும் 'லேண்டிங் கியர்' அருகே உள்ள சக்கரம் ஆகியவை சேதமடைந்தன.
இதனால் விமானத்தில் இருந்த பயணியருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. பயணியர் அனைவரும் விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றப் பட்டனர்.
சேதம் அதிகம் இருந்ததால், விமான சேவையை ரத்து செய்வதாகவும், விமானக் கட்டணத்தை முழுமையாக திரும்ப செலுத்துவதாகவும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
இதற்கிடையே நேற்று மாலை 6:00 மணிக்கு, 175 பயணியருடன் டில்லியில் இருந்து பெங்களூரு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தின், 'ஏசி' யூனிட்டில் தீ பற்றியது. இதை அறிந்து பயணியர் அலறினர். உடனடியாக அவசரநிலை அறிவிக்கப்பட்டு, வானில் பறந்த விமானம் மீண்டும் டில்லியில் தரையிறக்கப்பட்டது. இதனால் பயணியர் உயிர் தப்பினர்.

