உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டு முன் பிளக்ஸ் பேனர்
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் வீட்டு முன் பிளக்ஸ் பேனர்
ADDED : ஆக 03, 2024 11:23 PM

பெங்களூரு: பெங்களூரில் விதிமீறலான பேனர், பிளக்ஸ்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் உள்துறை அமைச்சரின் இல்லம் முன்பே பிளக்ஸ், பேனர் தென்படுகின்றன. இது குறித்து, பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
பெங்களூரில் அதிகரிக்கும் விதிமீறலான பிளக்ஸ், பேனர்களால் நகரின் அழகு கெடுகிறது. சுற்றுச்சூழலும் பாழாகிறது. பொதுமக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. இத்தகைய பிளக்ஸ், பேனர்களுக்கு கடிவாளம் போடும்படி கர்நாடக உயர்நீதிமன்றம் பல முறை, மாநகராட்சிக்கு உத்தரவிட்டுள்ளது.
மாநகராட்சியும் நடவடிக்கை எடுத்துள்ளது. விதிமீறலான பிளக்ஸ், பேனர்கள் குறித்து 1533 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, புகார் அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. மாநகராட்சியுடன், போலீஸ் துறையும் கைகோர்த்தது.
இரவு ரோந்து சுற்றும் போது, எங்காவது பிளக்ஸ், பேனர்கள் வைப்பதை கண்டால் விசாரிக்க வேண்டும். முறைப்படி அனுமதி பெறப்பட்டதா என்பதை, உறுதி செய்து கொள்வது குறித்து, சமீபத்தில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால் விதிகளை வகுத்தவர்களே, தற்போது அதை மீறுகின்றனர். போலீஸ் துறையை நிர்வகிக்கும் உள்துறை அமைச்சர் பரமேஸ்வருக்கு, ஆகஸ்ட் 6 பிறந்த நாள். அவருக்கு வாழ்த்து கூறி ஆதரவாளர்கள், காங்கிரஸ் தொண்டர்கள் பிளக்ஸ், பேனர்கள் வைத்துள்ளனர்.
பெங்களூரு, சதாசிவநகர் இல்லத்தின் சுற்றுப்பகுதிகளில் வரிசையாக பிளக்ஸ், பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதைப் பார்த்து பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
'விதிகள் என்பது, எங்களுக்கு மட்டும்தானா, இது அரசுக்கு பொருந்தாதா? அமைச்சரின் வீட்டு முன்பாகவே, பிளக்ஸ், பேனர்களை வைத்துள்ளனர். மக்களுக்கு ஒரு நியாயம். அரசியல்வாதிகளுக்கு ஒரு நியாயமா?' என காட்டமாக கேள்வி எழுப்புகின்றனர்.