பிளாஸ்டிக் இல்லா தசரா கண்காட்சி கர்நாடக அரசு முடிவு
பிளாஸ்டிக் இல்லா தசரா கண்காட்சி கர்நாடக அரசு முடிவு
ADDED : செப் 10, 2024 06:41 AM
மைசூரு: மைசூரு தசராவை பார்க்க, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணியரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
வழக்கம் போல், தசரா கண்காட்சி மைதானத்தில், 90 நாள் கண்காட்சி நடக்கிறது.
இந்நாளில், பயணியரை கவரும் வகையில், பிளாஸ்டிக் இல்லா தசராவாக கொண்டாடுவது உட்பட பல ஏற்பாடுகளை செய்ய, கர்நாடக கண்காட்சி ஆணையம் திட்டமிட்டு உள்ளது.
ஆணைய தலைவர் ஆயூப் கான் கூறியதாவது:
இம்முறை தசரா விழாவை, பிரமாண்டமாக நடத்த அரசு முடிவு செய்துள்ளது. 15 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணியர் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கம் போல், இத்திட்டத்தை ஒப்படைக்க தனியார் நிறுவனத்திடம் டெண்டர் கோரப்பட்டு உள்ளது.
மாநில அரசின் பிரபலமான திட்டங்களான அன்ன பாக்யா, கிரஹலட்சுமி, கிரஹ ஜோதி, சக்தி, யுவநிதி போன்ற வாக்குறுதி திட்டங்களின் பலன்களை காட்சிப்படுத்த, பல்வேறு விற்பனை நிலையங்கள் திட்டமிடப்பட்டு உள்ளன. இம்முறையும் மணல் சிற்பங்கள் இருக்கும்.
துணி பை
இம்முறை தசரா கண்காட்சியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்த முடியாது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்த கூடிய பிளாஸ்டிக் கவர்கள், பாட்டில்களை, தசரா கண்காட்சி மைதானத்தில் வெளியே போட்டு விட வேண்டும்.
அதற்கு பதிலாக, துணிப்பைகள் வழங்கப்படும். இதற்காக சங்கங்கள், அமைப்புகள், சுற்றுலாத் துறையுடன் ஆலோசிக்கப்பட்டது. ரோட்டரி சங்கம் சார்பில் 50 ஆயிரமும்; அவதுாத தத்த பீடத்தின் கணபதி சச்சிதானந்த ஆசிரமத்தில் இருந்து ஒரு லட்சம் துணிப்பைகளும் இலவசமாக வழங்கப்படும்.
கண்காட்சியில் அதிகளவில் கழிவுகள் உருவாகின்றன. இம்முறை துாய்மைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இரவு, பகல் என இருமுறை துப்புரவு பணி நடக்கும். மின் விளக்குகள் பிரமாண்டமாக செய்யப்படுகின்றன. பாதுகாப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மைசூரு பிராண்ட்
வெளிநாட்டு சுற்றுலா பயணியரை கவரும் வகையில், மைசூரு பிராண்டை விளம்பரப்படுத்த, மைசூரு மல்லிகை, நஞ்சன்கூடு ரசவாழை, வெற்றிலை பாக்கு, மைசூரு பாக்கு, மைசூரு தலைப்பாகை, மைசூரு எம்பிராயாட்ரி பொருட்கள், மைசூரு ஓவியம், கைவினை பொருட்கள், மைசூரு பட்டு, சந்தன மர பொருட்கள் இடம் பெறும்.
குழந்தைகளை மகிழ்விக்க, 'ஆன்லைன்' விளையாட்டுகள் அறிமுகம் செய்யப்படும். ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் கலாசார நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.