ADDED : ஏப் 08, 2024 05:03 AM

பெங்களூரு: சிக்கபல்லாபூரில் வரும் 14ம் தேதி நடக்கும் பிரசார பொது கூட்டத்திலும்; பெங்களூரு வடக்கில் நடக்கும் ரோடு ஷோவிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
லோக்சபா தேர்தலை ஒட்டி, கர்நாடகாவின், கலபுரகி, ஷிவமொகா ஆகிய மாவட்டங்களில் கடந்த மாதம் நடந்த பிரசார பொதுக் கூட்டங்களில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பிரசாரம் மேற்கொண்டார்.
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, பெங்களூரின் மூன்று இடங்களில் மோடி ரோடு ஷோ நடத்தினார். அந்த தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைத்தது. எனவே, லோக்சபா தேர்தலிலும் ரோடு ஷோ நடத்துவது நல்லது என்று மாநில தலைவர்கள் கட்சி மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
தேர்தல் அறிவிப்புக்கு பின், முதன் முறையாக வரும் 14ம் தேதி மதியம் 3:00 மணிக்கு சிக்கபல்லாபூருக்கு வருகிறார். அங்கு நடக்கும் பிரமாண்டமான பிரசார பொது கூட்டத்தில், மோடி பங்கேற்கிறார். பின், பெங்., வடக்கு தொகுதிக்கு உட்பட்ட பேட்ராயனபுரா, ஹெப்பால் பகுதிகளில் ரோடு ஷோ நடத்துகிறார்.
எந்த வழியில் ரோடு ஷோ நடத்தினால், வெற்றிக்கு வழி வகுக்கும் என்பது குறித்து, பா.ஜ., தலைவர்கள் 'ரூட் மேப்' தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா ஷிவமொகாவில் நேற்று கூறுகையில், ''பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தலா நான்கைந்து முறை கர்நாடகாவில் பிரசாரம் நடத்த வருகின்றனர். உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் வருகிறார்,'' என்றார்.

