'போக்சோ' வழக்கில் போலீசில் ஆஜர்; எடியூரப்பாவிடம் 3 மணி நேரம் 'கிடுக்கி'
'போக்சோ' வழக்கில் போலீசில் ஆஜர்; எடியூரப்பாவிடம் 3 மணி நேரம் 'கிடுக்கி'
ADDED : ஜூன் 18, 2024 06:18 AM

பெங்களூரு : கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, 'போக்சோ' வழக்கு விசாரணைக்காக நேற்று சி.ஐ.டி., போலீசாரின் விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், மூன்று மணி நேரம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
கர்நாடகாவில் நான்கு முறை முதல்வராக இருந்தவர், பா.ஜ.,வின் எடியூரப்பா, 81. இவரிடம் உதவி கேட்டு சென்றபோது, தன் 17 வயது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக, அப்பெண்ணின் தாய் மார்ச் மாதம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, எடியூரப்பா மீது, போக்சோ பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு இம்மாதம் 13ம் தேதி ஆஜராகும்படி, எடியூரப்பாவுக்கு சி.ஐ.டி., சம்மன் அனுப்பியது. அவரோ, தான் டில்லியில் இருப்பதால், 17ம் தேதி ஆஜராவதாக தன் வழக்கறிஞர்கள் வாயிலாக கடிதம் அனுப்பினார்.
இதை ஏற்காத சி.ஐ.டி., எடியூரப்பாவை கைது செய்ய நீதிமன்றத்தில் கைது வாரன்ட் பெற்றது. இதை எதிர்த்து, எடியூரப்பா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அவரை கைது செய்ய தடை விதித்த உயர் நீதிமன்றம், ஜூன் 17ல் விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அறிவுறுத்தியது.
இதன்படி, பெங்களூரு அரண்மனை சாலையில் உள்ள சி.ஐ.டி., அலுவலகத்தில், நேற்று காலை 11:00 மணிக்கு எடியூரப்பா ஆஜரானார். அவரிடம் மதியம் 2:00 மணி வரை, விசாரணை அதிகாரி பிருத்வி, எஸ்.பி., சாரா, டி.எஸ்.பி., புனித் ஆகியோர் தீவிர விசாரணை நடத்தினர்.
'புகார் அளித்த பெண் எதற்காக வந்தார்; அவரது மகளை சீண்டினீர்களா; அந்த பெண்ணிடம் 2 லட்சம் ரூபாய் கொடுத்ததாகக் கூறப்படுவது உண்மையா' என்பது உட்பட பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன.
'உதவி கேட்டு வந்த பெண்ணுக்கு உதவிய என் மீதே புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில், அரசியல் காழ்ப்புணர்ச்சி உள்ளது' என்று எடியூரப்பா பதில் அளித்துள்ளதாக தெரிகிறது. 'மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் வர வேண்டும்' என்று விசாரணை அதிகாரி கூறியுள்ளார். அதற்கு, 'கண்டிப்பாக வருகிறேன்' என பதில் தெரிவித்துள்ளார்.
விசாரணை முடிந்ததும், எடியூரப்பா தன் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.