ADDED : ஜூன் 07, 2024 11:00 PM

சண்டிகர்: நடிகையும், லோக்சபா எம்.பி.,யுமான கங்கனாவை சண்டிகர் விமான நிலையத்தில் கன்னத்தில் அறைந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் போலீஸ் குல்வீந்தர் கவுர் நேற்று கைது செய்யப்பட்டார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், ஹிமாச்சலின் மண்டி தொகுதியில் பா.ஜ., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கங்கனா.
இவர், நேற்று முன்தினம் ஹிமாச்சலில் இருந்து சண்டிகர் வழியாக டில்லிக்கு சென்றார்.
சண்டிகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் முடிந்து, கங்கனா விமானம் ஏறச் சென்ற போது, அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையைச் சேர்ந்த பெண் போலீஸ் குல்வீந்தர் கவுர், கங்கனாவை கன்னத்தில் அறைந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன், வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாப் விவசாயிகள் நடத்திய போராட்டத்தை கங்கனா விமர்சித்திருந்தார். 100 ரூபாய்க்காக பெண்கள் போராட்டத்தில் பங்கேற்றதாக கூறியிருந்தார்.
இந்த பேச்சிற்காகவே அவரை அறைந்ததாகவும், அந்த போராட்டத்தில் தன் தாயும் பங்கேற்றதாகவும் குல்வீந்தர் கவுர் கூறினார்.
இந்த சம்பவத்தை அடுத்து, குல்வீந்தர் கவுர் நேற்று முன்தினம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில், சண்டிகர் போலீசில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், நேற்று அவர் கைது செய்யபட்டார்.
தன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்காத பாலிவுட் திரைத்துறையை விமர்சித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
அதில், 'என் மீது விமான நிலையத்தில் நடந்த தாக்குதலை நீங்கள் அனைவரும் கொண்டாடி இருப்பீர்கள் அல்லது மவுனமாக இருப்பீர்கள்.
'ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்; நீங்கள் கூறிய ஏதாவது ஒரு கருத்துக்காக நாட்டில் எங்கேனும் உங்கள் மீதோ அல்லது உங்கள் குழந்தை மீதோ தாக்குதல் நடக்கலாம். அப்போதும் உங்களின் கருத்து சுதந்திரத்திற்காக நான் தான் குரல் கொடுப்பேன்' என கூறியிருந்தார். பின் அந்த பதிவை நீக்கிவிட்டார்.