வெளிநாட்டினருக்கு வாடகை வீடு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
வெளிநாட்டினருக்கு வாடகை வீடு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
ADDED : மார் 04, 2025 09:03 PM

பெங்களூரு : “வெளிநாட்டு நபர்களுக்கு, சட்டவிரோதமாக வாடகைக்கு கொடுக்கும் வீட்டு உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் தயானந்தா தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வீட்டு உரிமையாளர்கள் வீட்டை வாடகைக்கு கொடுக்கும்போது, விதிகளை பின்பற்ற வேண்டும். வெளிநாட்டவருக்கு வீடு வாடகைக்கோ அல்லது நிர்வகிப்புக்கு தரும்போது, வெளிநாட்டவர் சட்டம் - 1964ன் படி, வீடுகளை வாடகைக்கு விட்ட 24 மணி நேரத்துக்குள், வெளிநாட்டுப் பதிவுத் துறைக்கு, ஆன்லைன் போர்ட்டல் மூலம், 'பாரம் - சி'யை நிரப்பி தாக்கல் செய்ய வேண்டும்.
அதிகாரிகள் இந்த பாரத்தை ஆய்வு செய்து, அனுமதி அளித்த பின்னரே, வீட்டை வாடகைக்கோ அல்லது நிர்வகிப்புக்கோ, வெளிநாட்டு பிரஜைகளுக்கு அளிக்க வேண்டும். அந்த வெளிநாட்டு பிரஜை பாரம் - சி பிரதியை வைத்திருக்க வேண்டும் என்பது விதி.
ஆனால் சில வீடுகளின் உரிமையாளர்கள், இந்த விதிமுறையை பின்பற்றுவது இல்லை. 2020லிருந்து இதுவரை, வெளிநாட்டு பிரஜைகளுக்கு பலரும் வீடுகளை வாடகைக்கு அளித்துள்ளனர்.
இது தொடர்பாக, 70 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் 42 வழக்குகள் போலீசாரின் விசாரணையிலும்; 26 வழக்குகள் நீதிமன்ற விசாரணையிலும் உள்ளன. ஒரு வழக்கு வேறு துறைக்கு மாற்றப்பட்டது. பண்டேபாளையா போலீஸ் நிலையத்தில் பதிவான வழக்கொன்றில், வீட்டு உரிமையாளரின் தவறு உறுதியானதால் அவருக்கு நீதிமன்றம் 5,000 ரூபாய் அபராதம் விதித்தது.
வெளிநாட்டு பிரஜைகளுக்கு வாடகைக்கோ அல்லது நிர்வகிப்புக்கோ வீடு தருவதற்கு முன்பு, அவர்களின் பின்னணியை தெரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பற்றி தகவல்களை, சம்பந்தப்பட்ட ஆணையங்களிடம் தெரிவிப்பது, வீட்டு உரிமையாளர்களின் கடமை.
பெங்களூரின், ஹெப்பால் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட, ஆனந்த் நகரில் வீடு ஒன்றில், சட்டவிரோதமாக தங்கியிருந்த, இரண்டு வெளிநாட்டு பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் விசா காலம் முடிந்தும், சொந்த நாட்டுக்கு செல்லாமல் தங்கிருந்தனர். இவர்கள் மீது வழக்குப் பதிவாகியுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.