ADDED : மார் 04, 2025 11:21 PM

பாலக்காடு; பாலக்காட்டில், காங்., கட்சியின் மாணவர் அணியான, கேரள ஸ்டூடன்ஸ் யூனியன் அமைப்பினர், கலால் அலுவலகம் முன் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்க, போலீசார் தடி அடி நடத்தினர்.
கேரள மாநிலத்தில், மாணவர்கள் இடையே போதை கலாசாரம் பரவி வருகிறது. இதற்கு காரணமான, போதை பொருட்கள் விற்பனை செய்யும் மாபியாக்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் கலால் துறையின் அணுகுமுறையை கண்டித்து, காங்., கட்சியின் மாணவர் அணியான, கேரள ஸ்டூடன்ஸ் யூனியன் அமைப்பினர், மாநிலம் முழுவதும் கலால் அலுவலகம் முன் நேற்று ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாலக்காடு கலால் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தை காங்., மாநில செயலாளர் ஆரியாடன் சவ்கத் துவக்கி வைத்தார். மாணவர் அணியின் மாவட்டத் தலைவர் நிகில் கண்ணாடி தலைமை வகித்தார்.
அப்போது, ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முடியாததால், போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து, போலீசார் தடி அடி நடத்தி ஆர்ப்பாட்டக்காரர்களை கைது செய்தனர்.