துப்பாக்கி முனையில் பெண் போலீஸ் பலாத்காரம் எஸ்.ஐ., டிஸ்மிஸ்
துப்பாக்கி முனையில் பெண் போலீஸ் பலாத்காரம் எஸ்.ஐ., டிஸ்மிஸ்
ADDED : ஜூன் 21, 2024 12:56 AM
ஹைதராபாத், தெலுங்கானாவில் பெண் போலீசை, துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்த எஸ்.ஐ., பணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கானாவின் ஜெயசங்கர் பூபல்பள்ளி மாவட்டத்தில் காளேஸ்வரம் போலீஸ் ஸ்டேஷன் அமைந்துள்ளது. இங்கு எஸ்.ஐ.,யாக பவானி சென் என்பவர் பணியாற்றி வந்தார். இவருடன் பணிபுரியும் பெண் தலைமை காவலரை, பவானி சென் கடந்த 16ம் தேதி அன்று துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக, மாவட்ட எஸ்.பி.,யை சந்தித்து பாதிக்கப்பட்ட பெண் காவலர் புகார் அளித்தார். விசாரணையில் பவானி சென் மீதான குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பவானி சென் போலீஸ் பணியில் இருந்து நேற்று நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
இது தொடர்பான உத்தரவை போலீஸ் ஐ.ஜி., ரங்கநாத் பிறப்பித்தார். அதில், 'ஏற்கனவே மூன்று பெண் போலீசாரை பவானி சென் பலாத்காரம் செய்துள்ளதாக வழக்குகள் உள்ளன.
'அவரின் செயல்பாடுகள் மாநில போலீசாரின் கவுரவத்தை சீர்குலைப்பதாக உள்ளது. எனவே, அவர் பணியில் இருந்து நீக்கப்படுகிறார்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.