ADDED : ஆக 16, 2024 10:59 PM

பெங்களூரு : காங்கிரஸ் அரசுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்திய, 28 பா.ஜ., தலைவர்கள் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
காங்கிரஸ் அரசு, மக்கள் விரோதமாக ஆட்சி செய்வதாக கூறி, 2023 ஜூன் 20ம் தேதி, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் பசவராஜ் பொம்மை தலைமையில், பெங்களூரு மவுரியா சதுக்கத்தில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்துக்கு, போலீஸ் அனுமதி பெற்றிருக்கவில்லை. இதனால், போராட்டம் செய்தவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தி, நகரின் வசந்த்நகரை சேர்ந்த அனில்குமார் முல்லுாரா என்பவர், பெங்களூரு 42வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் கடந்தாண்டு மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீது சில நாட்களுக்கு முன், விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மனுதாரர் குறிப்பிட்டுள்ளவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி, நீதிபதி உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், ஹைகிரவுண்ட்ஸ் போலீஸ் நிலையத்தில் நேற்று 28 பா.ஜ., தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அனுமதியின்றி போராட்டம் நடத்திய, தற்போதைய ஹாவேரி எம்.பி., பசவராஜ் பொம்மை, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்;
மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமி, மேல்சபை எதிர்க்கட்சி தலைமை கொறடா ரவிகுமார், பெங்களூரு சென்ட்ரல் எம்.பி., மோகன், எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணப்பா, முனிராஜு உட்பட முக்கிய தலைவர்கள் மீது வழக்கு பதிவாகி உள்ளது.