கவர்னர் மீதான பாலியல் புகார்: 'சிசிடிவி' பதிவு கேட்கும் போலீஸ்
கவர்னர் மீதான பாலியல் புகார்: 'சிசிடிவி' பதிவு கேட்கும் போலீஸ்
UPDATED : மே 05, 2024 11:37 AM
ADDED : மே 04, 2024 11:38 PM

கோல்கட்டா: மேற்கு வங்க கவர்னர் ஆனந்த போஸ் மீது, தற்காலிக பெண் பணியாளர் அளித்த பாலியல் புகார் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைத்து, அம்மாநில போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கவர்னர் மாளிகையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை தங்களிடம் தரும்படி, கவனர் மாளிகைக்கு போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மாநில அரசுக்கும், கவர்னருக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
மம்தா அரசு மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கவர்னர் முன்வைத்து வருகிறார். இந்நிலையில், கவர்னர் மாளிகையில் பணியாற்றும் தற்காலிக பெண் பணியாளர் ஒருவர், சமீபத்தில் போலீசில் புகார் அளித்தார்.
அதில், கவர்னர் ஆனந்த போஸ் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்ததாக குறிப்பிட்டுள்ளார். எனினும், இதை கவர்னர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
கவர்னருக்கு எதிராக அவதுாறு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து, மாநில போலீசார், கவர்னர் மாளிகைக்குள் நுழைய நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு விசாரணை குழுவை மாநில போலீசார் அமைத்துள்ளனர்.
இது தொடர்பாக, அம்மாநில மூத்த போலீஸ் அதிகாரி கூறியதாவது:
பொதுவாக யார் புகார் அளித்தாலும் அதன்படி விசாரணை நடத்தப்படும். இது, வழக்கமான நடைமுறை தான். புகார் அளித்த நபரிடம் முதலில் விசாரணை நடத்துவோம்.
இதேபோல், கவர்னர் மாளிகையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான வீடியோக்களை ஆய்வு செய்ய உள்ளோம். இதற்காக அவற்றை தருமாறு கோரிக்கை விடுத்துள்ளோம்.
வழக்கு விசாரணையின் போது, தேவைப்பட்டால் கவர்னர் மாளிகைக்குள் சென்று விசாரணை நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.