போக்குவரத்துக்கு இடையூறு போலீசார் அதிரடி நடவடிக்கை
போக்குவரத்துக்கு இடையூறு போலீசார் அதிரடி நடவடிக்கை
ADDED : ஆக 15, 2024 04:39 AM

சாம்ராஜ்நகர் | ; போக்குவரத்து இடையூறாக சாலை ஓரங்களில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் காற்றை போலீசார் வெளியேற்றி, எச்சரிக்கை விடுத்தனர்.
சாம்ராஜ் நகர், கொள்ளேகால் போலீஸ் நிலைய மகளிர் எஸ்.ஐ., வர்ஷா. நேற்று முன்தினம் தான் இங்கு மாற்றலாகி வந்தார்.
நேற்று முன்தினம் காலையில், தனது போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது, சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள், கார்களை கவனித்தார். சக போலீசாரிடம், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் டயர்களில் உள்ள காற்றை இறக்கிவிடும்படி கூறினார். அவர்களும் அதை செய்தனர்.
இத்துடன், பாதசாரிகள் நடந்து செல்லும் நடைபாதையில் தள்ளுவண்டி வைத்திருந்தோர், கடைகளின் பேனர்களை வைத்திருந்தோருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
எஸ்.ஐ., வர்ஷா கூறுகையில், ''போலீஸ் நிலையத்திலேயே அதிக நேரம் இருக்காமல், பொதுமக்களின் பிரச்னை, சட்டம் - ஒழுங்கு, போக்குவரத்து பிரச்னையை தெரிந்து கொள்ள அதிக முக்கியத்துவம் கொடுப்பேன்.
நான் இங்கு இருக்கும் வரை இந்த நடவடிக்கை தொடரும். இரவு 10:30 மணிக்கு மேல், அனைத்து கடைகள், பார்கள் மூடப்படும். போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கும் வாகனங்களை நிறுத்துவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படாமல், பொதுமக்களுக்கு போலீசார் பாதுகாப்பாக இருப்பர்,'' என்றார்.
14_DMR_0008