விஷ ஊசி போட்டு போலீஸ் கொலை மொபைல் திருடர்கள் அட்டூழியம்
விஷ ஊசி போட்டு போலீஸ் கொலை மொபைல் திருடர்கள் அட்டூழியம்
ADDED : மே 03, 2024 12:45 AM
மும்பை, தன் மொபைல் போனை திருடிக்கொண்டு தப்பி ஓடிய கொள்ளை கும்பலிடம் இருந்து அதை போலீஸ்காரர் மீட்க முயன்றார். அப்போது, அவரை தாக்கிய கும்பல், விஷ ஊசியை செலுத்தி கொலை செய்து விட்டு தப்பி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆயுதப்படை போலீஸ்காரர் விஷால் பவார், 30. ஏப்., 28ல் தேதி இரவில் மும்பை புறநகர் ரயிலில் பணிக்கு சென்று கொண்டிருந்தார்.
சயான் - மாதுங்கா இடையே ரயில் மெதுவாக சென்றபோது, கதவருகே நின்று மொபைல் போனில் பேசியபடி பவார் சென்றார்.
அப்போது தண்டவாளம் அருகே கீழே நின்றிருந்த மர்ம நபர், கம்பால் பவாரின் கையில் தாக்கினார்.
இதில் தவறி கீழே விழுந்த மொபைல் போனை எடுத்துக்கொண்டு அந்த நபர் ஓட்டம் பிடித்தார்.
ரயில் மெதுவாக சென்றதால் போலீஸ்காரர் பவார், ரயிலில் இருந்து இறங்கி அந்த நபரை விரட்டி சென்றார்.
சிறிது துாரம் சென்றதும் போலீஸ்காரரை ஒரு கும்பல் சுற்றி வளைத்து தாக்கியது. அவர்கள் போதையில் இருந்தனர்.
அப்போது அவர்களில் ஒருவர், விஷ ஊசியை போலீஸ்காரர் மீது குத்தியுள்ளார். மேலும் அவர் வாயில் சிவப்பு நிற திரவத்தை அந்த கும்பல் ஊற்றியது.
இதில் நிலை குலைந்து விழுந்த போலீஸ்காரர் பவார், மறுநாள் காலை நினைவு திரும்பியதும் வீடு திரும்பினார்.
ஆனால், அவர உடல் நலம் மோசமடைந்ததை அடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர்.
ஆனாலும், சிகிச்சை பலனின்றி பவார் பரிதாபமாக உயிரிழந்தார். பவாரை தாக்கிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.