ADDED : ஏப் 27, 2024 05:57 AM
விஜயநகரா: வெயிலில் இருந்து தப்பிக்க, அரசியல் தலைவர்கள் மரங்களை தேடி ஓடுகின்றனர். மர நிழலில் பொதுக்கூட்டம் நடத்துகின்றனர்.
பல்லாரி லோக்சபா தொகுதிக்கு, மே 7ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் அனல் பறக்க பிரசாரம் செய்கின்றனர். ஆனால் வெப்பத்தின் தாக்கம், அரசியல் தலைவர்களை சோர்வடைய செய்துள்ளது. அவர்களின் உற்சாகத்துக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளது.
தொகுதியில் பிரசாரத்துக்கு செல்லும்போது, மரங்களை தேடுகின்றனர். மரங்களின் நிழலில் பிரசார கூட்டங்கள் நடத்துகின்றனர். மரங்களின் அடியில் கூட்டம் நடத்தும்படி, உள்ளூர் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.
கே.எம்.எப்., தலைவர் பீமா நாயக், நேற்று முன் தினம் விஜயநகரா, ஹகரிபொம்மனஹள்ளியின், ஹரேகொன்டனஹள்ளி, மாலவி, மசாரி நெல்குத்ரி, கோகலி தான்டா, பென்னகல்லு, வரலஹள்ளி, வட்டம்மனஹள்ளி, வல்லபாபுரா உட்பட பல்வேறு கிராமங்களில், காங்கிரஸ் வேட்பாளர் துக்காராமுக்கு ஆதரவாக, பிரசார கூட்டம் நடந்தது. இந்த கூட்டங்களும் கூட, மரங்களின் அடியில்தான் நடந்தன.
விஜயநகரா மட்டுமின்றி, பெரும்பாலான வடமாவட்டங்களில் இதே சூழ்நிலை நிலவுகிறது.

