'டம்மி' வேட்பாளர்கள் போட்டியால் அரசியல் கட்சிகள் கலக்கம்!: குழப்பத்துக்கு முடிவு கட்ட தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை
'டம்மி' வேட்பாளர்கள் போட்டியால் அரசியல் கட்சிகள் கலக்கம்!: குழப்பத்துக்கு முடிவு கட்ட தேர்தல் கமிஷனுக்கு கோரிக்கை
ADDED : ஏப் 21, 2024 06:30 AM
பெங்களூரு: லோக்சபா தேர்தலுக்கு வேட்பாளர்கள் உற்சாகமாகத் தயாராகின்றனர். ஆனால் களத்தில் உள்ள, 'டம்மி'கள், வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கின்றனர். 'இந்த குழப்பத்துக்கு தேர்தல் கமிஷன் முடிவு கட்ட வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கர்நாடகாவில் இரண்டு கட்டங்களாக, லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது. முதற்கட்ட ஓட்டுப்பதிவு ஏப்ரல் 26, இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவு மே 7ல் நடக்கவுள்ளது. ஆளுங்கட்சியான காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் பா.ஜ., - ம.ஜ.த., வேட்பாளர்கள் வெற்றிக்காக தொகுதியை சுற்றி வந்து பிரசாரம் செய்கின்றனர்.
இதற்கிடையில் களத்தில் உள்ள, 'டம்மி' வேட்பாளர்கள் அரசியல் கட்சி வேட்பாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கின்றனர்.
முக்கிய தலைவர்களின் பெயர்களுக்கு பொருத்தமான வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். கர்நாடகாவில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலில், பி.எஸ்.எடியூரப்பா, ஹெச்.டி.ரேவண்ணா என, பலரது பெயர்கள் உள்ளன.
சிக்கபல்லபூரில் சுதாகர், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். இதே தொகுதியில் என்.சுதாகர், டி.சுதாகர் என்ற பெயர்களில் டம்மி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இது வாக்காளர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும்.
பெங்களூரு ரூரல் தொகுதியிலும், இதே கதைதான். பா.ஜ., வேட்பாளராக டாக்டர் மஞ்சுநாத், காங்., வேட்பாளராக சுரேஷ் களத்தில் உள்ளனர். இவர்களுடன் மஞ்சுநாத், கே.மஞ்சுநாத், சி.என்.மஞ்சுநாத் என்ற பெயரில் சிலர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
பெங்களூரு வடக்கு தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் ஷோபா களமிறங்கியுள்ளார். இங்கு பல ஷோபாக்கள் போட்டியிடுகின்றனர். வாக்காளர்களை குழப்பும் நோக்கில், இத்தகைய டம்மி வேட்பாளர்களை களமிறக்கியதாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
டம்மி வேட்பாளர்களால், அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் கிலி அடைந்துள்ளனர். ஓட்டுப் பதிவின்போது, வாக்காளர்கள் குழப்பமடைவர். இதனால் ஓட்டுகள் பிரியக்கூடும் என்ற அச்சம், வேட்பாளர்களை வாட்டுகிறது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுமலதா அம்பரிஷுக்கு எதிராக, மூன்று சுமலதாக்கள் களமிறங்கினர். இவர்களை காங்கிரஸ் உள்நோக்கத்துடன் களமிறக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து, அரசியல் ஆர்வலர் சந்தோஷ் கூறியதாவது:
டம்மி வேட்பாளர்களை களமிறக்குவதால், வெற்றி பெறும் திறன் கொண்ட வேட்பாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இவருக்கு கிடைக்க வேண்டிய ஓட்டுகள் சிதறும். ஹைவோல்டேஜ் தொகுதிகளில், இதுபோன்று செய்வதால், வாக்காளர்கள் குழப்பமடைவர்.
டம்மி வேட்பாளர்கள் களமிறங்காமல் தடுப்பது, அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களின் கடமை மட்டும் அல்ல. தேர்தல் ஆணைய அதிகாரிகள், இதைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
இதனால், வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படலாம் அல்லது வெற்றி பெறும் வேட்பாளர்களின் ஓட்டு வித்தியாசம் குறையலாம். இந்த குழப்பங்களுக்கு தேர்தல் கமிஷன் தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
இதற்கு முன் தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு, பேலட் பேப்பர் பயன்படுத்தப்பட்டது. பேலட் பேக்கர் பயன்படுத்திய போது, ஒரே பெயரில் வேட்பாளர்கள் இருந்தால், வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்படலாம்.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வந்த பின்னும், சிறிய அளவில் குளறுபடி இருந்தது.
மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், வேட்பாளர்களின் போட்டோ பயன்படுத்திய பின், எந்த குழப்பமும் இல்லை.
வேட்பாளரின் போட்டோ, கட்சி சின்னம், அவரது பெயர் பதிவு செய்யப்படுகிறது. முதலில் தேசிய கட்சிகள், கீழ் வரிசையில் மாநில கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்களின் விபரங்கள் இருக்கும். எனவே வாக்காளர்கள் குழப்பமடைய வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

