ADDED : செப் 08, 2024 02:24 AM

புதுடில்லி :ஐ.ஏ.எஸ்., பணியில் இருந்து பூஜா கேத்கரை உடனடியாக நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர், 2023ல் நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்றதை அடுத்து, புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
இவர், பயிற்சி காலத்தில், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு வழங்கப்படாத சலுகைகளை முறைகேடாக பெற்றதாக புகார் எழுந்தது.
தொடர்ந்து, அவர் மீதான புகார்கள் ஒவ்வொன்றாக வெளிவரத் துவங்கின.
விசாரணையில், யு.பி.சி.எஸ்., தேர்வில், ஓ.பி.சி., எனப்படும் இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பு சான்றிதழை போலியாக கொடுத்தது தெரியவந்தது.
இதையடுத்து, பூஜா கேத்கரின் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சியை, ஜூலை 31ல், யு.பி.எஸ்.சி., ரத்து செய்தது. மேலும் இது குறித்து டில்லி போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இதை எதிர்த்து, பூஜா கேத்கர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், ஐ.ஏ.எஸ்., பணியில் இருந்து பூஜா கேத்கரை நீக்கி மத்திய அரசு உத்தரவிட்டது.
செப்., 6ம் தேதி உத்தரவுப்படி, ஐ.ஏ.எஸ்., நன்னடத்தை விதிகள் - 1954, விதி 12ன் கீழ், இந்திய ஆட்சிப் பணியில் இருந்து பூஜா கேத்கர் உடனடியாக நீக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.