பூஜாவின் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி ரத்து எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை
பூஜாவின் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி ரத்து எதிர்காலத்தில் தேர்வு எழுதவும் தடை
ADDED : ஆக 01, 2024 01:26 AM

புதுடில்லி, சர்ச்சையில் சிக்கிய பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சியை அதிரடியாக ரத்து செய்த யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், எதிர்காலத்தில் தேர்வில் பங்கேற்கவும் நிரந்தர தடை விதித்தது.
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேத்கர், 34, கடந்த 2022ல் நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில் தேர்ச்சி பெற்றார். பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பணியில் சேர்ந்த அவர், புனே உதவி கலெக்டராக நியமிக்கப்பட்டார்.
மோசடி
இவர், தன் சொகுசு காரில், அரசு பெயர் பலகை மற்றும் சிவப்பு - நீல சுழல் விளக்கை பயன்படுத்தியது, சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பின், பூஜா கேத்கர் மீதான ஒவ்வொரு புகார்களும் வெளிவரத் துவங்கின.
பயிற்சி அதிகாரிகளுக்கு வழங்கப்படாத சலுகைகளை, அவர் முறைகேடாக பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. மேலும், குற்ற வழக்கில் கைதான நபர்களை விடுவிக்க, போலீசுக்கு அவர் அழுத்தம் கொடுத்த தகவலும் வெளியானது.
தொடர்ந்து, ஐ.ஏ.எஸ்., பணியில் சேர்ந்தபோது, உடல் ரீதியான குறைபாடு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கான சான்றிதழ்களை, பூஜா கேத்கர் முறைகேடாக சமர்ப்பித்ததாகவும் புகார் எழுந்தது.
இப்படி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கியதை அடுத்து, காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இது குறித்து விசாரிக்க, மத்திய அரசு சார்பில் ஒரு நபர் கமிஷனும் அமைக்கப்பட்டது.
இதற்கிடையே, பூஜா கேத்கர் மீது, யு.பி.எஸ்.சி., சார்பில் டில்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், பயிற்சி ஐ.ஏ.எஸ்., அதிகாரி பூஜா கேத்கரின் தேர்ச்சியை ரத்து செய்த யு.பி.எஸ்.சி., எதிர்காலத்தில் தேர்வில் பங்கேற்க, அவருக்கு நிரந்தர தடை விதித்தும் நேற்றுஉத்தரவிட்டது.
இது குறித்து, யு.பி.எஸ்.சி., நேற்று வெளியிட்ட அறிக்கை:
யு.பி.எஸ்.சி., விதிகளை மீறி, போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாகக் கூறப்படுவது குறித்து, ஜூலை 25க்குள் விளக்கம் அளிக்கும்படி, பூஜா மனோரமா திலீப் கேத்கருக்கு, ஜூலை 18ல் நோட்டீஸ் அளிக்கப்பட்டது.
இதற்கு பதிலளிக்க, ஆக., 4 வரை அவர் அவகாசம் கோரினார். ஜூலை 30 வரை அவருக்கு அவகாசம் அளிக்கப்பட்டது. இது மேலும் நீட்டிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டது. எனினும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அவர் பதிலளிக்கவில்லை.
குற்றம் நிரூபணம்
யு.பி.எஸ்.சி., நடத்திய விசாரணையில், பூஜா கேத்கர் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் தன் பெயரை மட்டுமல்ல; பெற்றோரின் பெயரையும் மாற்றியுள்ளார்.
பூஜா கேத்கர் மீதான குற்றம் நிரூபணமானதை அடுத்து, அவரது யு.பி.எஸ்.சி., தேர்ச்சி ரத்து செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் யு.பி.எஸ்.சி., தேர்வில் பங்கேற்க அவருக்கு நிரந்தர தடை விதிக்கப்படுகிறது.
இந்த விசாரணையின் போது, 2009 - 2023க்கு இடையில் ஐ.ஏ.எஸ்., தேர்ச்சி பெற்ற, 15,000க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் எந்த முறைகேடும் கண்டறியப்படவில்லை.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.