ADDED : மே 04, 2024 11:02 PM

தார்வாட்: தார்வாடில் 1,262 தேர்தல் பணியாளர்கள் தபால் ஓட்டுப் போட்டனர்.
கர்நாடகாவில் இரண்டாம் கட்டமாக தேர்தல் நடக்கும் தொகுதிகளில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள, அதிகாரிகள், பணியாளர்களுக்கு கடந்த 1, 2, 3 ஆகிய மூன்று நாட்கள் தபால் ஓட்டுப் போடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தரப்பட்டது. அந்த வகையில், தார்வாட் லோக்சபா தொகுதியில், 1,262 பணியாளர்கள் தபால் ஓட்டுப் போடுவதற்கு விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கு, அவர்கள் பணியாற்றும் சட்டசபை தொகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகத்தில், காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தபால் ஓட்டுப் போடுவதற்கு மூன்று நாட்கள் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
விண்ணப்பித்த 1,262 தேர்தல் பணியாளர்களுமே தவறாமல் ஓட்டுப்பதிவு செய்தனர். குறிப்பாக போலீசாரே அதிக எண்ணிக்கையில் வந்திருந்தனர். சில வாக்காளர்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு ஓட்டுப்போட வந்தனர். அவர்கள், சம்பந்தப்பட்ட தாலுகா அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதுகுறித்து, தார்வாட் லோக்சபா தொகுதி தேர்தல் அதிகாரி திவ்யாபிரபு வெளியிட்ட அறிக்கை:
தேர்தல் பணியாளர்கள் போட்ட ஓட்டுகள், அவர்களின் சொந்த லோக்சபா தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், தேர்தல் நாளன்று ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்கள், அந்தந்த ஓட்டுச்சாவடிகளிலேயே ஓட்டுப்பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.