ADDED : ஏப் 26, 2024 09:22 PM
புதுடில்லி:மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டதைக் கண்டித்து, டில்லி மாநகராட்சியில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ., கவுன்சிலர்கள் மாறிமாறி கோஷமிட்டதால் பரபரப்பு நிலவியது.
டில்லி மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், இந்த தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக நேற்று முன் தினம் இரவு, கவர்னர் அலுவலகம் அறிவித்தது. முதல்வர் ஒப்புதலுடன் தேர்தல் அதிகாரி நியமிக்கப்படாததால் தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டு இருந்தது.
இதைக் கண்டித்து, ஆம் ஆத்மி கவுன்சிலர்கள் மாநகராட்சி மன்றத்தில் நேற்று கோஷமிட்டனர். பா.ஜ., கவுன்சிலர்களும் மேயர் ஷெல்லி ஓபராய் இருக்கையை முற்றுகையிட்டு கோஷமிட்டனர்.
இதனால், சபையில் சலசலப்பும், பரபரப்பும் நிலவியது. ஆம் ஆத்மி கவுன்சிலர்கள், 'தலித் விரோதி பா.ஜ.,' என கோஷமிட்டனர். டில்லி மாநகராட்சியில் தலித் சமூகத்தைச் சேர்ந்தவருக்கு மேயர் பதவி ஒதுக்கீடு செய்யப்பட்டுஉள்ளது.
எனவே, தலித் ஒருவர் மேயராக வரக்கூடாது என பா.ஜ., திட்டமிடுகிறது என ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது.
ஒரு மணி நேரத்துக்குப் பின் சபையில் அமைதி திரும்பியது.
மேயர் ஷெல்லி ஓபராய் பேசும்போது, ''டில்லி துணைநிலை கவர்னர் சக்சேனா அரசியலமைப்புச் சட்டத்தை கொலை செய்துள்ளார். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் இருப்பதை ஒரு காரணமாகக் காட்டி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தலை தடுத்துள்ளார்,'' என்றார்.
இதையடுத்து, மாநகராட்சிக் கூட்டத்தை ஒத்திவைப்பதாக அறிவித்து, புறப்பட்டுச் சென்றார்.
பா.ஜ., உத்தரவுப்படிதான் டில்லி மேயர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் அதிஷி குற்றம் சாட்டியுள்ளார்.

