கோடையில் 8,200 மெகாவாட் அளவுக்கு மின்நுகர்வு உயரும் பி.எஸ்.இ.எஸ்., மின்வினியோக நிறுவனம் கணிப்பு
கோடையில் 8,200 மெகாவாட் அளவுக்கு மின்நுகர்வு உயரும் பி.எஸ்.இ.எஸ்., மின்வினியோக நிறுவனம் கணிப்பு
ADDED : மே 23, 2024 02:15 AM
புதுடில்லி:டில்லியின் மின்நுகர்வு நிகழ் கோடையில் புதிய உச்சத்தை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, அதிகபட்சமாக 8,200 மெகாவாட் என்ற அளவைத் தொடலாம் என, மின் வினியோக நிறுவனம் கணித்துள்ளது.
தேசிய தலைநகரான டில்லியில் மொத்தம் 50 லட்சம் நுகர்வோரும் 2 கோடி குடியிருப்புகள் இணைப்பும் உள்ளன. நகரின் மின்தேவையை மூன்று மின் வினியோக நிறுவனங்கள் பூர்த்தி செய்கின்றன.
தெற்கு, மேற்கு டில்லி பகுதிகளுக்கு பி.எஸ்.இ.எஸ்., ராஜ்தானி பவர் லிமிடெட் மின் வினியோகம் செய்கிறது. கிழக்கு, மத்திய டில்லி பகுதி மின் வினியோகத்தை பி.எஸ்.இ.எஸ்., யமுனா பவர் லிமிடெட் நிர்வகிக்கிறது.
வடக்கு டில்லி மின் வினியோகத்தை டாடா பவர் கையாள்கிறது.
நகரின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவாக கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3:33 மணி அளவில் 7,717 மெகாவாட் என்ற சாதனை அளவை எட்டியது.
இதற்கு முன்பு 2022 ஜூன் 29ல் 7,695 மெகாவாட் மின்நுகர்வு இருந்ததே முந்தைய அதிகபட்சமாகும்.
இந்நிலையில், நிகழ் கோடையில் மின்நுகர்வு மேலும் அதிகரிக்கும் என்றும் புதிய உச்சங்களைத் தொடலாம் என்றும் மின் வினியோக நிறுவனம் கணித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் அதிகாரிகள் கூறியதாவது:
நகரின் மின்நுகர்வு கடந்த சனிக்கிழமை முதல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. கோடையின் தாக்கம் அதிகரித்து வருவதே இதற்கு காரணம்.
வெப்பம் காரணமாக ஏர்கண்டிஷனர்கள், ஏர்கூலர்கள், ரெப்ரிஜிரேட்டர்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. இவற்றை வாங்குபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. இதனால் இந்த ஆண்டின் மின்நுகர்வு 8,000 மெகாவாட்டையும் கடந்து 8,200 மெகாவாட் என்ற அளவுக்கு உயரலாம்.
மின்நுகர்வை சமாளிக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
மின்நுகர்வு அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு பி.எஸ்.இ.எஸ்., நீண்டகால மற்றும் குறுகியகால ஒப்பந்தங்கள் மூலம் 2,500 மெகாவாட் மின்சாரத்தை வாங்கத் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதனால் பொதுமக்களும் தொழில் துறையினரும் கவலைப்படத் தேவையில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

