ADDED : மே 03, 2024 07:09 AM
பெங்களூரு: கர்நாடகாவின் மின்தேவை, கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரலில், 16,110 மெகாவாட்டாக இருந்தது. நடப்பாண்டு ஏப்ரலில் இந்த அளவு 16,985 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே மின் தேவையும் அதிகரித்துள்ளது. தேவைக்கு ஏற்றபடி மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாமல், மின்சார ஒழுங்கு முறை ஆணைய அதிகாரிகள் திண்டாடுகின்றனர்.
இது தொடர்பாக, மின்சாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளதே, மின் தேவை அதிகரிக்க காரணம். இரவு நேரத்தில் மக்கள், 'ஏசி' சாதனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். எனவே மின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
தேவைக்கு தகுந்தபடி, மின்சாரம் வினியோகிக்க மின் உற்பத்தி நிலையங்களில், அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ராய்ச்சூர் அனல் மின் உற்பத்தி நிலையத்தில், ஒரு யூனிட்டை தவிர, மற்ற ஏழு யூனிட்களில் மின் உற்பத்தி நடக்கிறது. இங்கு 1,110 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது.
சோலார் மின் உற்பத்தி, திருப்திகரமாக உள்ளது. பகல் முழுதும் சோலார் மின்சாரம் உற்பத்தியாகிறது. பல்லாரி அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று யூனிட்களிலும்; யரமரஸ் அனல் மின் உற்பத்தி நிலையத்தில் மூன்று யூனிட்களிலும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.