திருநங்கைகளுக்கு ரூ.2,000 பிரபா மல்லிகார்ஜுன் உறுதி
திருநங்கைகளுக்கு ரூ.2,000 பிரபா மல்லிகார்ஜுன் உறுதி
ADDED : மே 03, 2024 07:15 AM

தாவணகெரே: 'கிரஹ லட்சுமி' திட்டத்தின் கீழ், திருநங்கைகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உதவி தொகை வழங்குவது குறித்து, அரசிடம் பேசுவதாக, தாவணகெரே காங்கிரஸ் வேட்பாளர் பிரபா மல்லிகார்ஜுன் உறுதி அளித்துள்ளார்.
தாவணகெரே காங்கிரஸ் வேட்பாளர் பிரபா மல்லிகார்ஜுன், தாவணகெரேயில் வாடகை வீட்டில் வசிக்கும், திருநங்கைகளை நேற்று சந்தித்து பேசினார். அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தேர்தலில் போட்டியிடும் தன்னை ஆதரிக்கும்படி, அவர்களிடம் கேட்டு கொண்டார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி:
தாவணகெரே மாவட்டத்தில் 1,825 திருநங்கைகள் வசிக்கின்றனர். அரசிடம் இருந்து மாதம் 800 ரூபாய் உதவி தொகை அவர்களுக்கு கிடைக்கிறது. கிரஹ லட்சுமி திட்டத்தின் கீழ் தங்களுக்கும் மாதம் 2,000 ரூபாய், உதவி தொகை வழங்க வேண்டும் என்று, என்னிடம் கோரிக்கை வைத்து உள்ளனர். இதுபற்றி அரசிடம் பேசுவேன்.
திருநங்கைகள் என்பதால் தங்களுக்கு, எளிதில் வாடகைக்கு வீடு கிடைப்பது இல்லை. ரேஷன் கார்டு உட்பட அரசின் சில சலுகைகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளதாக கூறினர். இதுபற்றி தாவணகெரே மாவட்ட பொறுப்பு அமைச்சர் மல்லிகார்ஜுன் கவனத்திற்கு கொண்டு செல்வேன். நான் எம்.பி., ஆனால் திருநங்கைகள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.