ராஜினாமா செய்ய மாட்டேன் பிரதீப் ஈஸ்வர் திட்டவட்டம்
ராஜினாமா செய்ய மாட்டேன் பிரதீப் ஈஸ்வர் திட்டவட்டம்
ADDED : ஜூன் 15, 2024 04:23 AM

சிக்கபல்லாப்பூர்: 'பா.ஜ., - எம்.பி., சுதாகர் மகிழ்ச்சி அடைவார் என்பதால், எனது பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்,'' என்று, சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் அறிவித்துள்ளார்.
சிக்கபல்லாப்பூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர், 39. 'லோக்சபா தேர்தலில் சிக்கபல்லாப்பூர் பா.ஜ., வேட்பாளர் சுதாகர், காங்கிரஸ் வேட்பாளரை விட, தான் எம்.எல்.ஏ.,வாக உள்ள சிக்கபல்லாப்பூர் சட்டசபை தொகுதியில், சுதாகர் கூடுதலாக, ஒரு ஓட்டு அதிகம் பெற்றால் கூட, எனது பதவியை ராஜினாமா செய்கிறேன்' என்று, சவால் விட்டார்.
மேலும், 'சுதாகரை பார்லிமென்ட் வாசலை மிதிக்க விட மாட்டேன்' எனவும் கூறினார்.
ஆனால், தேர்தல் முடிவில் சுதாகர் 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் ஜெயித்ததுடன், சிக்கபல்லாப்பூர் சட்டசபை தொகுதியில், காங்கிரஸ் வேட்பாளரை விட, 17,000 ஓட்டுகள் கூடுதலாக பெற்றார். இது, பிரதீப் ஈஸ்வருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. அவர் எப்போது ராஜினாமா செய்வார் என்று, பா. ஜ., தலைவர்கள் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.
இந்நிலையில் பிரதீப் ஈஸ்வர் நேற்று அளித்த பேட்டி:
என் மீது பா.ஜ., தலைவர்களுக்கு பயமா. என்னை பதவி விலக வற்புறுத்தும் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. லோக்சபா தேர்தலின் போது, சுதாகருக்கு நான் விடுத்த சவாலை அவர் ஏற்கவில்லை. இதனால், நான் எதற்காக ராஜினாமா செய்ய வேண்டும். அவர் எனது சவாலை ஏற்று இருந்தால், நான் ராஜினாமா செய்திருப்பேன்.
சிக்கபல்லாப்பூரில் சுதாகர் கூடுதல் ஓட்டு வாங்கியதும், ராஜினாமா செய்ய வேண்டும் என்று முதலில் நினைத்தேன். ஆனால், நான் ராஜினாமா செய்தால் சுதாகர் மகிழ்ச்சியாகி விடுவார். அதற்கு நான் விடமாட்டேன். அவருக்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்.
என் வீட்டின் மீது கல் வீசிய சுதாகரின் ஆதரவாளர்களிடம் போலீசார் விசாரித்துள்ளனர். அந்த சம்பவம் குறித்து நான் ஏதாவது கருத்து கூறியிருந்தால், எனது ஆதரவாளர்களுக்கும், சுதாகரின் ஆதரவாளர்களுக்கும் இடையில் சண்டை தான் ஏற்பட்டிருக்கும்.
அரசியலுக்காக ஆதரவாளர்களை பலி கொடுக்கும் நபர் நான் இல்லை. சுதாகர், பெங்களூரில் சந்தோஷமாக இருக்கிறார். நான் எனது குடும்பத்துடன் இங்கு சந்தோஷமாக உள்ளேன். எங்கள் இருவருக்காக ஆதரவாளர்கள் ஏன் அடித்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

