பிரஹலாத் ஜோஷி, பொம்மை, கீதா ஒரே நாளில் 52 பேர் வேட்புமனு தாக்கல்
பிரஹலாத் ஜோஷி, பொம்மை, கீதா ஒரே நாளில் 52 பேர் வேட்புமனு தாக்கல்
ADDED : ஏப் 16, 2024 05:55 AM

மத்திய அமைச்சர்கள் பிரஹலாத் ஜோஷி, பகவந்த் கூபா, முன்னாள் முதல்வர் பசவராஜ் பொம்மை, தயாரிப்பாளர் கீதா சிவராஜ்குமார் உட்பட 45 ஆண்கள், ஏழு பெண்கள் என 52 பேர் நேற்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
கர்நாடகாவில், இரண்டாம் கட்டமாக மே 7ம் தேதி, 14 தொகுதிகளில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல், கடந்த 12ம் தேதி துவங்கியது. மனு தாக்கலுக்கு, வரும் 19ம் தேதி கடைசி நாள்.
கடந்த 13, 14ல் விடுமுறை என்பதால், நேற்று ஒரே நாளில், 45 ஆண்கள், ஏழு பெண்கள் என 52 பேர் மனுதாக்கல் செய்தனர்.
யார்? யார்?
மத்திய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சரும், தார்வாட் பா.ஜ., வேட்பாளருமான பிரஹலாத் ஜோஷி, திறந்த வாகனத்தில் ஊர்வலமாக வந்து, தொகுதி தேர்தல் அதிகாரி திவ்யாபிரபுவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
அப்போது, முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜெகதீஷ் ஷெட்டர், முன்னாள் எம்.பி., பிரபாகர் கோரே இருந்தனர். இவர்கள் முன்னிலையில், ஐந்தாவது முறையாக மனு தாக்கல் செய்தது பெருமையாக இருப்பதாக ஜோஷி தெரிவித்தார்.
மத்திய உரம் மற்றும் ரசாயனத்துறை அமைச்சரும், பீதர் பா.ஜ., வேட்பாளருமான பகவந்த் கூபா, எம்.எல்.சி., ரகுநாத்ராவ் மல்காபுரே, அக்கட்சி மாவட்ட தலைவர் சோம்நாத் பாட்டீல் ஆகியோருடன் வந்து, தேர்தல் அதிகாரி கோவிந்தரெட்டியிடம் பெயரளவில் மனு தாக்கல் செய்தார்.
பெரிய பேரணி
பின், 18ம் தேதி பெரிய அளவில் பேரணி நடத்தி மீண்டும் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். முன்னாள் முதல்வரும், ஹாவேரி பா.ஜ., வேட்பாளருமான பசவராஜ் பொம்மை, முன்னாள் அமைச்சர் பி.சி.பாட்டீல் உட்பட கட்சி தலைவர்களுடன் சென்று, தேர்தல் அதிகாரி ரகுநந்தன் மூர்த்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இவரும் பேரணி நடத்தி மீண்டும் ஒருமுறை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.
பிரபல கன்னட திரைப்பட தயாரிப்பாளரும், ஷிவமொகா காங்கிரஸ் வேட்பாளருமான கீதா சிவராஜ்குமார், நேற்று காலையில் நல்ல நேரம் பார்த்து, தன் கணவரும், நடிகருமான சிவராஜ்குமார் உட்பட காங்., தலைவர்கள் முன்னிலையில், தேர்தல் அதிகாரி குருதத்தா ஹெக்டேவிடம் மனு தாக்கல் செய்தார்.
சிவகுமார் தாமதம்
பின், நகரின் ரமண ஷ்ரேஸ்டி பூங்காவில் இருந்து, பேரணி நடத்தினார். துணை முதல்வர் சிவகுமார் வருவதற்கு தாமதமானதால், கீதாவின் சகோதரரும், பள்ளிக்கல்வி துறை அமைச்சருமான மதுபங்காரப்பா தலைமை வகித்தார். மாவட்டம் முழுதும் வந்திருந்த ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
குழந்தைகள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கரின் மகனும், பெலகாவி காங்கிரஸ் வேட்பாளருமான மிருணாள் ஹெப்பால்கர், துணை முதல்வர் சிவகுமார், பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, தாய் லட்சுமி ஹெப்பால்கர், தாய்மாமாவும், எம்.எல்.சி.,யுமான சென்னராஜ் ஹட்டிஹோளி ஆகியோருடன் வந்து, தேர்தல் அதிகாரி நிதேஷ் பாட்டீலிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முன்னதாக, முக்கிய மடாதிபதிகளை வீட்டுக்கு வரவழைத்து, அவர்களுக்கு பாதபூஜை செய்தார். பின், பிரமாண்டமான பேரணி நடத்தினார்.
எம்.எல்.ஏ., 'ஆப்சென்ட்'
ஜவுளித்துறை அமைச்சர் சிவானந்த பாட்டீலின் மகளும், பாகல்கோட் காங்கிரஸ் வேட்பாளருமான சம்யுக்தா ஹெக்டே, கட்சி பிரமுகர்களுடன் வந்து மனு தாக்கல் செய்தார். அதிருப்தி காங்., - எம்.எல்.ஏ., விஜயானந்த் காசப்பனவர், இவரது மனைவி வீணா காசப்பனவர் வரவில்லை.

