ADDED : மார் 22, 2024 05:47 AM
பெங்களூரு: ஹாசன் லோக்சபா தொகுதி ம.ஜ.த., -- எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, பா.ஜ., மூத்த தலைவர் எடியூரப்பாவை சந்தித்து ஆசி பெற்றார்.
லோக்சபா தேர்தலில், பா.ஜ., -- ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளன. ஹாசன் தொகுதி ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. ஹாசன் லோக்சபா தொகுதிக்கு, ஏப்ரல் 26ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஸ்ரேயஷ் படேல் போட்டியிடுகிறார்.
ம.ஜ.த., வேட்பாளராக பிரஜ்வல் ரேவண்ணா களமிறங்குவது, பெரும்பாலும் உறுதி. இவருக்கு பதிலாக வேறு வேட்பாளரை அறிவிக்கும்படி, பா.ஜ., ஆலோசனை கூறியது. ஆனால் ம.ஜ.த., வேட்பாளரை மாற்றும் வாய்ப்பில்லை. இவரே போட்டியிடும் வாய்ப்புள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை, பெங்களூரின் இல்லத்தில் நேற்று காலை சந்தித்து பிரஜ்வல் ரேவண்ணா ஆசி பெற்றார். இவருடன் முன்னாள் அமைச்சர் ரேவண்ணாவும் வந்திருந்தார். லோக்சபா தேர்தல் பிரசாரம் குறித்து, தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
கடந்த லோக்சபா தேர்தலின் போது, காங்கிரசுடன் கை கோர்த்திருந்த ம.ஜ.த., இம்முறை பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்துள்ளது. ஹாசன் தொகுதியில் இதற்கு முன் வேட்பாளர்களாக போட்டியிட்ட பிரஜ்வல் ரேவண்ணா, ஸ்ரேயஷ் படேல், இம்முறையும் எதிராளிகளாக உள்ளனர்.
ஹாசன் தொகுதியில், ம.ஜ.த., தொண்டர்கள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் பா.ஜ., மேலிடத்திடம் இருந்து, அதிகாரபூர்வ உத்தரவு வராததால், 'பிரஜ்வல் ரேவண்ணாவை ஆதரித்து, பிரசாரம் செய்ய வேண்டாம்' என, ஹாசன் மாவட்ட பா.ஜ., அறிக்கை வெளியிட்டு உள்ளது.

