பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் பெங்களூரு வருகை : விமான நிலையத்தில் கைது செய்ய தீவிரம்
பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவில் பெங்களூரு வருகை : விமான நிலையத்தில் கைது செய்ய தீவிரம்
UPDATED : மே 30, 2024 09:08 PM
ADDED : மே 30, 2024 09:02 PM

பெங்களூரு : பாலியல் வழக்கில் தேடப்பட்டு வந்த கர்நாடகா ம.ஜ.த., எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா இன்று இரவு இந்தியா வந்திறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவில், பிரதான எதிர்க்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, 33. ஹாசன் தொகுதி எம்.பி.,யாக உள்ளார். மீண்டும் இதே தொகுதியில் போட்டியிடுகிறார்.
இவர், சில பெண்களை மிரட்டி, பலாத்காரம் செய்ததாகவும், ஏராளமான ஆபாச வீடியோக்கள் வைத்திருந்ததாக கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியானது. ஏப். 26ம் தேதி இரவு, ஜெர்மனிக்கு தப்பியோடினார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், அவர் மீது மூன்று பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 28-ம் தேதி சமூக வலைதளங்களில் பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ வெளியிட்டார். அதில் மே.31-ம் தேதி நாடு திரும்புவதாகவும், சிறப்பு விசாரணை குழு முன் ஆஜராக உள்ளதாவும் தெரிவித்தார்.ஜெர்மனியின் முனிச் நகரிலிருந்து புறப்பட்டு இன்று நள்ளிரவு பெங்களூரு வந்திறங்குவார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து பிரஜ்வல் ரேவண்ணாவை விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்ய சிறப்பு புலனாய்வு குழு போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். நாளை (மே.31ம் தேதி) காலை 10:00 மணிக்கு எஸ்.ஐ.டி., முன் விசாரணைக்கு ஆஜராகிறார்.