ADDED : மே 28, 2024 12:42 AM

பெங்களூரு, பாலியல் வழக்கில் தேடப்படும் கர்நாடக ம.ஜ.த., - எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, வரும் 31ம் தேதி நாடு திரும்பி, சிறப்பு புலனாய்வு குழு முன் ஆஜராகிறார்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தேசிய தலைவரான முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா, 33. ஹாசன் தொகுதி எம்.பி.,யாக இருக்கும் இவர், தற்போதைய தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட்டார்.
இவர், சில பெண்களை மிரட்டி, அவர்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள், கடந்த மாதம் சமூக வலைதளங்களில் வெளியாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏப்ரல் 26ம் தேதி இரவு, துாதரக பாஸ்போர்ட் பயன்படுத்தி ஜெர்மனி சென்று விட்டார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில், ஹொளேநரசிபுரா போலீஸ் நிலையத்தில், அவர் மீது மூன்று பலாத்கார வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்கை, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் நேற்று பிரஜ்வல் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:
முதலாவதாக என் தந்தை, தாய், தாத்தா, குமாரசாமி, மாநில மக்கள், கட்சி தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன். ஏப்ரல் 26ம் தேதி தேர்தல் நடந்த போது, என் மீது எந்த வழக்கும் பதிவாகவில்லை. எஸ்.ஐ.டி.,யும் அமைக்கவில்லை. ஏப்ரல் 26ம் தேதி வெளிநாட்டுக்கு சென்றேன். அது ஏற்கனவே திட்டமிட்டிருந்த பயணம்.
மூன்று, நான்கு நாட்களுக்கு பின், யு டியூபில் செய்தி பார்த்த போது தான், எனக்கு தகவல் தெரிந்தது. எஸ்.ஐ.டி., வழங்கிய நோட்டீசுக்கு, எக்ஸ் வலைதளம் வாயிலாகவும், என் வழக்கறிஞர்கள் வாயிலாகவும் ஏழு நாட்கள் கால அவகாசம் கேட்டு பதில் அளித்தேன்.
ஆனால், அடுத்த நாளே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் உட்பட அக்கட்சி தலைவர்கள், என் விஷயத்தை பகிரங்கமாக பேச ஆரம்பித்தனர். அரசியல் சூழ்ச்சி நடப்பதை அறிந்தேன். இதனால், மன அழுத்தத்துக்கு ஆளானேன். தனிமைப்படுத்தப்பட்டேன்.
வரும் 31ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:00 மணிக்கு எஸ்.ஐ.டி., முன் ஆஜராகி, விசாரணைக்கு ஒத்துழைப்பேன். நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. கண்டிப்பாக என் மீதான பொய் புகாரில் இருந்து வெளியே வருவேன்.
இவ்வாறு அவர் பேசியுள்ளார்.