பிரஜ்வல் வீடியோ விவகாரம்: எஸ்.ஐ.டி., அமைக்க முடிவு
பிரஜ்வல் வீடியோ விவகாரம்: எஸ்.ஐ.டி., அமைக்க முடிவு
ADDED : ஏப் 27, 2024 11:28 PM
பெங்களூரு: ஹாசன் ம.ஜ.த., வேட்பாளர் பிரஜ்வல் ரேவண்ணா, பெண்களுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்படும் வீடியோக்கள் தொடர்பாக விசாரணை நடத்த, எஸ்.ஐ.டி., எனும் சிறப்பு விசாரணை குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.
ம.ஜ.த.,வை சேர்ந்த முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா. இவர், ஹாசன் எம்.பி.,யாக பதவி வகிக்கிறார். இம்முறை லோக்சபா தேர்தலில், ம.ஜ.த., வேட்பாளராக மீண்டும் களமிறங்கி உள்ளார்.
இதற்கிடையில், சில பெண்களுடன் அவர் நெருக்கமாக இருக்கும் வீடியோ துணுக்குகள், பென்டிரைவ் மூலம், சில நாட்களாக சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. தங்களை அவர் தவறாக பயன்படுத்திக் கொண்டதாகவும், நெருக்கமாக இருக்கும்போது வீடியோ எடுத்து, மிரட்டுவதாகவும் சில பெண்கள் ஒரு கன்னட 'டிவி' சேனலில் தெரிவித்திருந்தனர்.
ஹாசனில் செல்வாக்குமிக்க ஒரு அரசியல் தலைவர், பெண்களை கட்டாயப்படுத்தி பாலியல் தொல்லை கொடுத்து, வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோக்கள் சமூகத்தில் பரவி, பெண்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.
எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், எஸ்.ஐ.டி., அமைக்கும்படி, மாநில மகளிர் ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, முதல்வர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதி இருந்தார்.
இதன் அடிப்படையில், சிறப்பு விசாரணை குழு அமைப்பதற்கு அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் அலுவலகம் நேற்றிரவு தெரிவித்தது.
இதற்கிடையில், பிரஜ்வல் ரேவண்ணா, வெளிநாட்டுக்கு சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
இவர், பெண்களுடன் நெருக்கமாக இருப்பது போன்ற 2,900க்கும் அதிகமான வீடியோக்கள் இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. ஆனால், அவரது முகம் தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

