'பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரத்தால் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படாது'
'பிரஜ்வல் ஆபாச வீடியோ விவகாரத்தால் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படாது'
ADDED : மே 14, 2024 04:27 AM
பெங்களூரு: பிரஜ்வல் ஆபாச வீடியோ வழக்கினால், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படாது' என, அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டாவுக்கு மாநில பா.ஜ., சார்பில் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் பா.ஜ.,வுக்கு வெற்றி வாய்ப்பு குறித்து, கட்சி மாநிலத் தலைவர் விஜயேந்திரா தலைமையில், மூன்று நாட்களுக்கு முன்பு, மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அன்று இரவு, மாநிலத்தின் ஒரு மூத்த தலைவரை, தேசிய தலைவர் நட்டா அலைபேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.
உட்கட்சி பூசல்
'கர்நாடகாவில் எத்தனை தொகுதிகளில் பா.ஜ.,வுக்கு வெற்றி கிடைக்கும்?' என, அவர் கேட்டுள்ளார்.
அப்போது, '2019 போன்று, 25 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெறுவது கடினம்' என, அவர் கூறியுள்ளார். கோபமடைந்த நட்டா, 'இதற்கு காரணம் என்ன? உட்கட்சி பூசல் காரணமா? பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா?' என, கேள்விகளை அடுக்கியுள்ளார்.
அதற்கு, அவர் கூறியதாவது:
பிரஜ்வல் ஆபாச வீடியோவால் எந்த பின்னடைவு ஏற்படாது. ஏனென்றால், முதல்கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில் ஓட்டுப்பதிவு முடிந்த பின்னரே விஷயம் பெரிதாக வெடித்தது.
இரண்டாம்கட்ட தேர்தல் நடந்த தொகுதிகளில், அவ்விஷயம் கொஞ்சம் கூட பேசப்படவில்லை.
மஹா சக்தி மையம்
கட்சியில் மூத்த தலைவர்கள் அலட்சியப்படுத்தியதே காரணம். குறிப்பாக கட்சியின் தேசிய அமைப்பு பொதுச் செயலர் சந்தோஷ் அலட்சியப்படுத்தப்பட்டார்.
அவர் தலையீடு இருந்தபோது, அனைத்து பூத் பிரமுகர்களும், வாக்காளர்களை மூன்று முறை சந்தித்தார்கள். பேஜ் பிரமுகர், ஐந்து பூத்களுக்கு ஒரு சக்தி மையம், ஐந்து சக்தி மையங்களுக்கு ஒரு மஹா சக்தி மையம், தொகுதி பிரமுகர்கள் என, கட்சியை பலப்படுத்தினார்.
இந்த தேர்தலில் சந்தோஷை அலட்சியப்படுத்தியதால், பழைய நடைமுறையை யாரும் பின்பற்றப்படவில்லை.
இவ்வாறு அவர் நட்டாவிடம் விளக்கினார்.
இது ஒரு தலைவரின் பின்னணி.
மொத்தத்தில் உட்கட்சி பூசல் தான் கட்சியின் பின்னடைவுக்கு காரணம் என்பதை சூசகமாக தேசிய தலைவருக்கு விளக்கப்பட்டுள்ளது.

