ADDED : ஏப் 04, 2024 04:22 AM

மைசூரு : மைசூரு பா.ஜ., - எம்.பி., பிரதாப் சிம்ஹா. இவருக்கு லோக்சபா தேர்தலில் 'சீட்' கிடைக்கவில்லை. மன்னர் குடும்பத்தின் யதுவீர் பா.ஜ., வேட்பாளராக உள்ளார். ஒக்கலிகர் சமூகத்தை சேர்ந்த, பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் கொடுக்காமல், பா.ஜ., புறக்கணித்து விட்டதாக, காங்கிரசில் இருக்கும் ஒக்கலிகர் சமூக தலைவர்கள் குற்றச்சாட்டு கூறி வருகின்றனர்.
கால்நடை அமைச்சர் வெங்கடேஷ் கூறுகையில், ''பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் கிடைக்காமல் போனதற்கு, தேவகவுடா தான் காரணம். ஹாசனில் அவரது பேரன் பிரஜ்வலை வெற்றி பெற வைப்பதற்கு, யதுவீரின் ஆதரவு தேவைப்பட்டது. இதனால் பா.ஜ., மேலிடத்திடம் நைசாக பேசி, யதுவீருக்கு சீட் வாங்கிக் கொடுத்தார்,'' என கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுத்து, பிரதாப் சிம்ஹா மைசூரில் நேற்று அளித்த பேட்டி:
அமைச்சர் வெங்கடேஷை அரசியல்ரீதியாக, பெரிய ஆளாக உருவாக்கியது தேவகவுடா தான். ஆனால் அதை மறந்து தேவகவுடாவை, விமர்சித்து பேசுகிறார். உண்ட வீட்டிற்கு, துரோகம் செய்தவர் அவர்.
மைசூரில் பிரதாப் சிம்ஹாவுக்கு சீட் தர வேண்டும் என்று வலியுறுத்திய சிலரில், தேவகவுடாவும் ஒருவர். எனக்காக அமித்ஷாவிடம் தொலைபேசியில் பேசினார்.இதுபோன்ற ஆதாரமற்ற கருத்துகள் கூறுவதை, அமைச்சர் வெங்கடேஷ் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர் மீது இருந்த மரியாதை போய்விட்டது.
கடந்த பத்து ஆண்டுகளாக மைசூரு தொகுதியில், ஏராளமான வளர்ச்சிப் பணிகள் செய்து உள்ளேன். எனது வேலையில் முழு திருப்தி அடைந்து உள்ளேன். கட்சி எடுக்கும் முடிவுக்கு, யாராக இருந்தாலும் கட்டுப்பட்டு ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

