பிரீமியம் பஸ் ஒருங்கிணைப்பு திட்டம் மாசு இல்லாத டில்லிக்கான மைல்கல்
பிரீமியம் பஸ் ஒருங்கிணைப்பு திட்டம் மாசு இல்லாத டில்லிக்கான மைல்கல்
ADDED : செப் 04, 2024 09:19 PM
மாசு இல்லாத டில்லியை உருவாக்குவதில் பிரீமியம் பஸ் ஒருங்கிணைப்பு திட்டம் ஒரு முக்கிய மைல்கல் என, மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் பெருமிதம் கொண்டார்.
தலைநகர் டில்லியின் மாசுபாட்டை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக தனிப்பட்ட வாகனங்களின் பயன்பாட்டை குறைத்து, பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில் பிரீமியம் பஸ்களை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டது.
இதற்காக செயலி அடிப்படையிலான பிரீமியம் பஸ்களை இயக்கும் திட்டத்தை அரசு உருவாக்கியது. இதற்கு கடந்த ஆண்டு நவம்பரில் துணை நிலை கவர்னர் ஒப்புதல் வழங்கினார்.
இந்த நிலையில் பிரீமியம் பஸ்களை இயக்குவதற்கான நேரம் கூடி வந்துவிட்டது. மின்சாரத்தில் இயங்கும் பிரீமியம் பஸ்கள் டில்லிக்கு வந்துள்ளன. ராஜ்காட் பணிமனையில் அந்த பஸ்களை மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் நேற்று ஆய்வு செய்தார்.
அதன் பின் தன் எக்ஸ் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
டில்லியில் பிரீமியம் பஸ் ஒருங்கிணைப்பு திட்டத்தின் கீழ் தொடங்கப்பட உள்ள முதல் பிரீமியம் பேருந்துகளை நான் ஆய்வு செய்தேன். டில்லியை மாசுபாட்டில் இருந்து விடுவிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் மாபெரும் பாய்ச்சலை எடுத்து வைத்துள்ளோம். கார்பன் உமிழ்வு இல்லாத மின்சார பஸ்கள் முன்னணியில் உள்ளன.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இந்த பஸ்களில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணம் செய்ய முடியும். டிஜிட்டல் முறையில் மட்டுமே பயணச்சீட்டு வழங்கப்படும். நடுத்தர, உயர் நடுத்தர வகுப்பினரை குறிவைத்து, இந்த பஸ்கள் இயக்கப்பட உள்ளன.