ADDED : ஜூலை 23, 2024 10:43 PM
பெங்களூரு : மெட்ரோ ரயில் சேவையை மூன்று வழித்தடங்களில் நீட்டிப்பது குறித்து, ஹைதராபாத் நிறுவனம் திட்ட அறிக்கை தயாரிக்க உள்ளது.
பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், ஒயிட்பீல்டு - செல்லகட்டா-; நாகசந்திரா- - சில்க் இன்ஸ்டிடியூட் ஆகிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆர்.வி., ரோடு -- பொம்மசந்திரா இடையில் மெட்ரோ பாதை அமைக்கப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முதல் ரயில்கள் இயக்கப்படும் வாய்ப்புள்ளது.
இந்த மூன்று வழித்தடங்களிலும், மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க, மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதாவது செல்லகட்டா வரை இயக்கப்படும் ரயில், 15 கி.மீ., துாரத்தில் உள்ள பிடதி வரையிலும்; சில்க் இன்ஸ்டிடியூட் வரை இயக்கப்படும் ரயில், -24 கி.மீ., துாரத்தில் உள்ள ஹரோஹள்ளி வரையிலும்; பொம்மசந்திரா- வரை இயக்கப்பட உள்ள ரயில், 11 கி.மீ., துாரத்தில் உள்ள அத்திபள்ளி வரையிலும் நீட்டிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க, சமீபத்தில் பெங்களூரில் மெட்ரோ ரயில் நிர்வாகம் டெண்டருக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதில் ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் 2 கோடி ரூபாய்க்கு 'டெண்டர்' எடுத்துள்ளது.

