ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் நிரந்தரமாக்க பட்டியல் தயாரிப்பு
ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் நிரந்தரமாக்க பட்டியல் தயாரிப்பு
ADDED : ஆக 13, 2024 07:32 AM

பெங்களூரு: ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க, பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. முதல் கட்டமாக பட்டியல் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
தங்களுக்கு பணிப் பாதுகாப்பு தேவை; பணியை நிரந்தரமாக்கும்படி ஒப்பந்த துப்புரவுத் தொழிலாளர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதை ஏற்றுக்கொண்ட மாநகராட்சி, ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்க முடிவு செய்துள்ளது.
பணியை நிரந்தரமாக்கி கொள்ள விரும்பும் தொழிலாளர்கள், விண்ணப்பம் தாக்கல் செய்ய, மே 15 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கான விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றை ஆய்வு செய்து வருகிறோம். அடுத்த 10 நாட்களில் இப்பணிகள் முடியும்.
அதன்பின் வரைவு நியமன பட்டியல் வெளியிடப்படும். ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்க, 15 முதல் 30 நாட்கள் அவகாசம் அளிக்கப்படும்.
இதை ஆராய்ந்த பின், தேவையான திருத்தங்கள் செய்து, துப்புரவுத் தொழிலாளர்கள் நியமன பட்டியல் வெளியிடப்படும். அதன்பின் ஒரு மாதத்தில் அவர்களுக்கு நியமன கடிதம் வழங்கப்படும்.
முதற்கட்டமாக 3,673 தொழிலாளர்களும், இரண்டாம் கட்டமாக 11,307 தொழிலாளர்களும் பணி நிரந்தரமாக்கப்படுவர். அரசு வகுத்த விதிமுறைப்படி, தகுதியான துப்புரவுத் தொழிலாளர்களை தேர்வு செய்ய, மாநகராட்சி தலைமை கமிஷனர் தலைமையில், 10 அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
நிரந்தரமாக்கப்படும் தொழிலாளர்களுக்கு, மாதம் 17,000 முதல் 18,950 ரூபாய் வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.