வயநாடு நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு பிரதமர் நேரில் ஆறுதல்!: சேத பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்
வயநாடு நிலச்சரிவில் பாதித்தவர்களுக்கு பிரதமர் நேரில் ஆறுதல்!: சேத பகுதிகளை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்தார்
UPDATED : ஆக 11, 2024 10:29 AM
ADDED : ஆக 10, 2024 11:55 PM

வயநாடு:வயநாடு நிலச்சரிவில் வீடிழந்து நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை, பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசி ஆறுதல் கூறினார். சேதங்களை ஹெலிகாப்டரில் ஆய்வு செய்த அவர், கேரள அரசுக்கு அனைத்து உதவிகளும் செய்வதாக உறுதி அளித்தார்.
கேரளாவின் வயநாட்டில், ஜூலை 30ம் தேதி கனமழையுடன் நிலச்சரிவு ஏற்பட்டது. சூரல்மலை, முண்டக்கை பகுதிகள் மோசமாக பாதிக்கப்பட்டன. இதுவரை, 225 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன; நுாற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர்; 130 பேரை காணவில்லை.

பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்யவும், வீட்டையும், குடும்பத்தினரையும் பறி கொடுத்த மக்களுக்கு ஆறுதல் சொல்லவும், மோடி நேற்று கேரளா வந்தார்.



மேப்படி என்ற இடத்தில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமுக்கு சென்ற மோடி, அங்கிருந்தவர்களுக்கு ஆறுதல் கூறினார். என்ன நடந்தது? எப்படி நடந்தது என்று, அவர்கள் விவரித்ததை கேட்டார்.

தாய், தந்தை உட்பட அனைத்து உறவுகளையும் இழந்த இரண்டு சிறுவர்களை ஆதரவாக அணைத்து ஆறுதல் கூறினார்.
டாக்டர் மூப்பன் மருத்துவ கல்லுாரியில் சிகிச்சை பெறுவோரை சந்தித்து, விரைவில் குணமடைய வாழ்த்தினார். பின், கல்பேட்டா திரும்பிய அவர், ஹெலிகாப்டர் வாயிலாக கண்ணுார் சென்றார். கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிவாரண ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார்.

''இதிலிருந்து அவர்கள் மீண்டு, இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் பிரார்த்தனை. மீட்பு மற்றும் மறுகுடியமர்வு பணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்,” என்று, அக்கூட்டத்தில் பிரதமர் தெரிவித்தார்.


