ADDED : செப் 04, 2024 03:53 AM

பந்தர் செரி பெகவான்: அரசு முறை பயணமாக, புருனே நாட்டுக்கு நேற்று சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆசிய நாடான புருனே, இஸ்லாத்தை அதிகாரப்பூர்வ மதமாகக் கொண்டிருக்கும் நாடு. இங்கு தற்போது வரை மன்னராட்சி முறையில் சுல்தான் தான் ஆட்சி செய்கிறார்.
இந்நிலையில், அரசு முறை பயணமாக, புருனேவுக்கு தனி விமானத்தில், பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்றார்.
பந்தர் செரி பெகவான் விமான நிலையத்தில், அவரை, புருனே இளவரசர் ஹாஜி அல்- முஹ்ததீ பில்லா நேற்று வரவேற்றார். அப்போது, பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, ஹோட்டலுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு, புலம்பெயர் இந்தியர்கள் வழிநெடுக நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். அவர்களுடன், மோடி கலந்துரையாடினார். இரு தரப்பு பயணமாக, புருனேவுக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார்.
விமான நிலையத்தில் தரையிறங்கிய உடன், பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், 'புருனேவில் தரையிறங்கி விட்டேன்.
'இரு நாடுகளுக்கு இடையேயான வணிக மற்றும் கலாசார தொடர்புகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த உள்ளேன். விமான நிலையத்தில் என்னை வரவேற்றதற்காக பட்டத்து இளவரசர் ஹாஜி அல்- முஹ்ததீ பில்லாவுக்கு நன்றி' என, குறிப்பிட்டார்.
பந்தர் செரி பெகவானில், நம் துாதரகத்தின் புதிய வளாகத்தை நேற்று மாலை திறந்து வைத்த பிரதமர் மோடி, புலம்பெயர் இந்தியர்களுடன் உரையாடினார்.
இந்தியா - புருனே இடையேயான இரு தரப்பு உறவுகள் குறித்து, அந்நாட்டு சுல்தான் ஹசனல் போல்கியாவுடன், பிரதமர் மோடி இன்று பேச்சு நடத்துகிறார். இந்த பயணத்தை முடித்து, தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூருக்கு, அவர் இன்று புறப்பட்டுச் செல்கிறார்.