மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் ராகுல் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்கிறார் ராகுல் மீது பிரதமர் மோடி பாய்ச்சல்
ADDED : செப் 17, 2024 02:37 AM

ஆமதாபாத், ''வெறுப்புணர்வு மற்றும் எதிர்மறை எண்ணங்களால் நிரம்பியுள்ள சிலர், நாட்டு மக்களின் ஒற்றுமையை சீர்குலைத்து, நாட்டுக்கு அவப்பெயரை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுலின் பெயரை குறிப்பிடாமல், பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த நிகழ்ச்சிகளில், இட ஒதுக்கீடு, சீக்கியர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
இந்நிலையில், குஜராத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சிகளில், 8,000 கோடி ரூபாய் மதிப்புள்ள பல திட்டங்களை துவக்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமர் மோடி பேசினார். அப்போது, ராகுலின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவர் பேசியதாவது:
மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்து, 100 நாட்களை எட்டியுள்ளோம். இந்த 100 நாட்களில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பல அவதுாறுகளை கூறின; மத்திய அரசை கடுமையாக விமர்சித்தன.
தனிப்பட்ட முறையில் என்னை கிண்டல், கேலி செய்தனர். ஆனால், எந்தக் கருத்தும் கூறாமல் அமைதியாக இருந்தேன். இது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கும்.
நாங்கள் ஆட்சி அமைத்து, முதல் 100 நாட்களில் செய்வதற்காக பல திட்டங்களை வகுத்திருந்தோம். அவற்றை நிறைவேற்றுவதில் உறுதியாக செயல்பட்டோம்.
இதனால், அவர்களுடைய கருத்துக்களுக்கு பதில் அளிக்காமல் இருந்தேன். எங்களுடைய பணிகளே, அவர்களுடைய விமர்சனங்கள், அவதுாறுகளுக்கு பதிலாகும்.
ஒவ்வொரு இந்தியரும், நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்வதற்காக உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், இங்கு ஒரு சிலர், வெறுப்புகளாலும், எதிர்மறை கருத்துக்களாலும் நிரம்பி உள்ளனர்.
அவர்கள், நம் மக்களின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றனர். வெளிநாடுகளில் நம் நாட்டுக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும், அரசியலமைப்பு சட்டத்தின், 370வது பிரிவை மீண்டும் கொண்டு வரப்போவதாக அவர்கள் கூறுகின்றனர்.
அதாவது, இரண்டு அரசியலமைப்பு சட்டம், இரண்டு சட்டங்கள் முறையை உருவாக்க பார்க்கின்றனர். இதன் வாயிலாக நாட்டை பிளவுபடுத்துவது அவர்களுடைய நோக்கம்.
நான் என் வாழ்க்கையை இந்த நாட்டுக்காக தியாகம் செய்துள்ளேன். நான் வாழ்வது உங்களுக்காக, நான் போராடுவதும் உங்களுக்காக, நான் என்னை தியாகம் செய்வதும் உங்களுக்காகவே.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக வீடுகளில் இலவச மின்சாரம் வழங்கும் சூரிய மின்சக்தி திட்டப் பயனாளிகளை, பிரதமர் மோடி சந்தித்து பேசினார். காந்தி நகரில் நேற்று முன்தினம் நடந்த சோம்நாத் கோவில் அறக்கட்டளை கூட்டத்திலும் அவர் பங்கேற்றார். அந்த அறக்கட்டளையின் தலைவராக மோடி உள்ளார்.

