பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் முதல்வர் சித்தராமையா கண்டுபிடிப்பு
பிரதமர் மோடிக்கு தோல்வி பயம் முதல்வர் சித்தராமையா கண்டுபிடிப்பு
ADDED : மே 28, 2024 06:13 AM

பெங்களூரு: ''லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைவது மோடிக்கு தெரிந்து விட்டது. எனவே, வித்தியாசமாக பேசி வருகிறார். கடவுளே என்னை அனுப்பினார் என்று கூறி உள்ளார். தோல்வி பயம், அவரை இந்த அளவுக்கு பேச வைத்துள்ளது,'' என முதல்வர் சித்தராமையா கூறினார்.
காங்கிரஸ் சார்பில் பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் நேரு நினைவஞ்சலி நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது.
நேருவின் உருவ படத்துக்கு, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் உட்பட கட்சி பிரமுகர்கள் மலர் துாவி வணங்கினர்.
பின், முதல்வர் சித்தராமையா பேசியதாவது:
நேரு ஆட்சி காலத்தில், ஜனநாயகம், மதசார்பின்மை கொள்கையை பின்பற்றி, நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு சென்றார். 17 ஆண்டுகள் தொடர்ந்து பிரதமராக இருந்து, நாட்டை கட்டி எழுப்பினார்.
காங்கிரஸ் ஆட்சி
உலகம் முழுதும் அமைதி நிலவ வேண்டும் என்று குரல் கொடுத்தவர். அப்போது மட்டுமே வளர்ச்சி பணிகள் செய்ய முடியும் என்ற நம்பிக்கை கொண்டவராக விளங்கினார். இந்தியாவை, உலகின் மிக பெரிய மற்றும் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நாடாக மாற்றினார்.
நாட்டில் உள்ள பெரும்பாலான அணைகள், அவரது காலத்தில் கட்டப்பட்டது தான். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ஒன்றுமே செய்ய முடியவில்லை என்று குற்றம் சாட்டும், பிரதமர் நரேந்திர மோடி, அவரது காலத்தில் ஒரே ஒரு அணை கட்டி உள்ளாரா.
ஹிந்து நாடு
நாட்டின் சுதந்திரத்திற்காக, நேரு, சிறை வாசம் அனுபவித்து கொண்டிருந்த போது, ஆங்கிலேயருக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ்., போராடவில்லை. அவர்கள், தற்போது தேசபக்தி குறித்து பேசுவது நகைப்பாக உள்ளது.
லோக்சபா தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வி அடைவது மோடிக்கு தெரிந்து விட்டது. எனவே, வித்தியாசமாக பேசி வருகிறார். கடவுளே என்னை அனுப்பினார் என்று கூறி உள்ளார். தோல்வி பயம், அவரை இந்த அளவுக்கு பேச வைத்துள்ளது. பா.ஜ.,வினருக்கு அரசியல் அமைப்பு மீது நம்பிக்கை இல்லை. அரசியல் சாசனப்படி, நாட்டை முன்னேற்ற காங்கிரசால் மட்டுமே முடியும்.
நேரு, இந்திரா காலத்தில் தான் விவசாயிகளுக்கு நிலம் வழங்கப்பட்டது. ஆனால், பா.ஜ., ஆட்சியில், விவசாயிகளின் நிலத்தை பறித்து தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்கிறது.
சமூகம், கலாசாரம் ரீதியில் இந்தியா மிக பெரிய நாடு. பன்முகத்தன்மை கொண்ட நாட்டை நாசம் செய்து, ஹிந்து நாடாக மாற்றுவது முடியாத காரியம். இந்த நாடு, ஒவ்வொரு இந்தியனுக்கும் சொந்தமானது.
இவ்வாறு அவர் பேசினார்.
துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள் உட்பட காங்கிரசார் பலரும் பங்கேற்றனர்.