ADDED : ஏப் 14, 2024 06:51 AM
தட்சிண கன்னடா: லோக்சபா தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தருவதால், அவர் ஊர்வலமாக செல்லும் வழித்தடத்தில் உள்ள தேன்கூடுகளை அகற்றுமாறு, வனத்துறையினருக்கு, மங்களூரு நகர போலீஸ் கமிஷனர் கடிதம் எழுதி உள்ளார். இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு, பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்ய, பிரதமர் மோடி இன்று தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு வருகை தருகிறார்.
இதுதொடர்பாக, வனத்துறைக்கு, நகர போலீஸ் கமிஷனர் அனுபம் அகர்வால் கடிதம் எழுதி உள்ளார்.
கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:
மங்களூரு நகரின் நாராயண்குரு சதுக்கத்தில் இருந்து நவ்பாரத் சதுக்கம் வரை பிரதமர் மோடி வாகனத்தில் ஊர்வலமாக வருகிறார்.
எனவே ஊர்வலம் நடக்கும் இடம், வாகன நிறுத்துமிடம், மங்களூரு சர்வதேச விமான நிலையம் சுற்றி உள்ள அனைத்து கட்டடங்கள், வீடுகள், மருத்துவமனைகள், மங்களூரு மாநகராட்சி கமிஷனர் அலுவலகம், எஸ்.டி.எம்., சட்டக்கல்லுாரி, அரசு விருந்தினர் மாளிகை ஆகிய இடங்களில் உள்ள தேன்கூடுகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் பெனடிக்ட் பெர்னாண்டஸ் கூறுகையில், ''பிரதமர் மோடியின் பாதுகாப்புக்காக இவ்வாறு செய்தாலும், தேன்கூடுகளை அகற்றி, தேனீக்களை அழிப்பது தவறு. பூமியில் உயிர் வாழ்வதற்கும், மனித இனத்தை காப்பாற்றுவதற்கும் தேனீக்களின் பங்கு முக்கியம். பூமியில் தேனீக்கள் முற்றிலுமாக அழிந்துவிட்டால், மனிதனின் முடிவு நிச்சயம்.
''தேன்கூட்டை அழிப்பது தவறு. இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். அசம்பாவிதங்களை தவிர்க்க, தேன்கூடுகளுக்கு அருகில் பாதுகாப்பு போட வேண்டும்,'' என்றார்.

