'யூ டியூப்' பார்த்து கொலை செய்ய முயற்சி; கேரளாவில் தனியார் பெண் டாக்டர் கைது
'யூ டியூப்' பார்த்து கொலை செய்ய முயற்சி; கேரளாவில் தனியார் பெண் டாக்டர் கைது
UPDATED : ஆக 01, 2024 05:24 AM
ADDED : ஜூலை 31, 2024 08:48 PM

திருவனந்தபுரம்:ஆசை நாயகன் தன்னை விட்டு விலகி செல்ல, அவரது மனைவி தான் காரணம் என எண்ணி, அவரை தீர்த்துக்கட்ட, 'யூ டியூப்' பார்த்து ஏர் கன் பயன்படுத்தி கொலை செய்ய முயன்று, தற்போது போலீசில் சிக்கியுள்ளார் கேரளாவில் தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் டாக்டர் ஒருவர். அது குறித்து போலீசார் அளித்த விபரம்:
திருவனந்தபுரம், செம்பகசேரியை சேர்ந்தவர் ஷினி, 35; மத்திய சுகாதார நிறுவனத்தில் அதிகாரியாக பணியாற்றுகிறார். இவரது கணவர் டாக்டர் சுஜித், 38. இவருக்கும், கொல்லத்தைச் சேர்ந்த தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் நுரையீரல் பிரிவு சிறப்பு மருத்துவர் தீப்தி மோள் ஜோஸ், 37, என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
சில மாதங்களாக தீப்தி மோளை, சுஜித் புறக்கணித்துள்ளார். இதற்கு ஷினி தான் காரணம் என நினைத்து, அவர் மீது கடும் கோபத்திற்கு ஆளானார் தீப்தி. அவரை கொலை செய்ய முடிவெடுத்தவர், இதற்காக யூ டியூப்பில் தேடியுள்ளார்.
அப்போது, 'ஏர் கன்' பயன்படுத்தி, நெருக்கமாக இருந்து சுட்டால் உயிரிழப்பு ஏற்படும் என, அறிந்தார். அது குறித்து விபரம் திரட்டியுள்ளார். இது தான் சரியான வழி என்ற முடிவுக்கு வந்தவர், உடனே, 'ஆன்லைன்' தளத்தில் ஏர்கன் ஒன்றை வாங்கினார்.
சில தினங்களுக்கு முன், கூரியர் டெலிவரி செய்வது போல, தீப்தி மோள், ஷினி வீட்டிற்கு சென்றார். கூரியர் வந்துள்ளதாக அவர் அழைத்ததும், ஷினி கதவை திறந்துள்ளார். அப்போது அவரை நோக்கி தீப்தி ஏர் கன்னில் சுட, சுதாரித்த ஷினி கையை வைத்து தடுத்துள்ளார். இதில், கையில் குண்டுபட்டு, ஷினிக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக, தீப்தி மோள் காரில் தப்பிச் சென்றார்.
இது தொடர்பாக, வஞ்சியூர் போலீசுக்கு வந்த தகவல் அடிப்படையில், 'சிசிடிவி' காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்திய போது, தீப்தி மோள் கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை பிடித்து நடத்திய விசாரணையில், மேற்கண்ட தகவல்கள் தெரியவந்தன. தீப்தி மோள் ஜோஸ், திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.