பிரியங்க் - மோகன்தாஸ் பை வார்த்தை மோதல் விஸ்வரூபம்
பிரியங்க் - மோகன்தாஸ் பை வார்த்தை மோதல் விஸ்வரூபம்
ADDED : பிப் 25, 2025 11:58 PM

பெங்களூரு; பெங்களூரை நகரை பாராட்டி 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவிட்ட விவகாரத்தில், அமைச்சர் பிரியங்க் கார்கே - தொழில் அதிபர் மோகன்தாஸ் பை இடையில் வார்த்தை மோதல் ஏற்பட்டு உள்ளது.
'மேலே இருக்கும் கடவுள் இறங்கி வந்தாலும், பெங்களூரில் நிலவும் பிரச்னையை இன்னும் 3 ஆண்டுகளில் தீர்க்க முடியாது' என்று, துணை முதல்வர் சிவகுமார் சமீபத்தில் கூறி இருந்தார். இதற்கு தொழில் அதிபரான மோகன்தாஸ்பை கடும் எதிர்ப்புதெரிவித்தார்.
தனது 'எக்ஸ்' பக்கத்தில், 'துணை முதல்வர் சிவகுமார் கருத்து நிர்வாக தோல்வியை ஒப்பு கொள்ளும் வகையில் உள்ளது. நகரின் வளர்ச்சியில் அவர் அதிக கவனம் செலுத்த வேண்டும். மெட்ரோ பயணியர் எண்ணிக்கையை குறைக்கும் வகையில், கட்டணம் உயர்த்தப்பட்டு உள்ளது.
சக்தி வாய்ந்த அமைச்சரான சிவகுமாரால் எதுவும் செய்ய முடியவில்லை.
'பெங்களூரு நகரை மேம்படுத்த நல்ல, சுத்தமான நடைபாதைகள் அமைத்தால் மக்களுக்கு பயன் அளிக்கும் என்பதை ஏன் உங்களால் உறுதி செய்ய முடியவில்லை.
தயவு செய்து மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்தி, அனைவருக்கும் உதவுங்கள்' என்று, குறிப்பிட்டு இருந்தார்.
பங்களிப்பு என்ன?
இந்நிலையில் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் பிரியங்க் கார்கேதனது 'எக்ஸ்' பக்கத்தில், 'இந்தியாவின் மதிப்புமிக்க நகரங்களில், பெங்களூரு இரண்டாவதுஇடத்தில் உள்ளது.
மொத்த ஐ.டி., ஏற்றுமதியில் பெங்களூரு 42 சதவீத பங்களிப்பு கொண்டு உள்ளது. நாட்டின் முன்னணி செயற்கை நுண்ணறிவு மையமாக விளங்குகிறது' என்று புகழ்ந்து பதிவிட்டு இருந்தார்.
இதற்கும் மோகன்தாஸ் பை எதிர்ப்பு தெரிவித்தார்.
'அமைச்சர் பிரியங்க் கார்கே, பெங்களூரை பற்றி நீங்கள் பதிவிட்டு இருப்பது எங்களுக்கும் தெரியும்.
மக்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த அமைச்சராக நீங்கள் என்ன செய்தீர்கள். உங்கள் பங்களிப்பு என்ன. ஒரு சுத்தமான நகரத்தை, குழிகள் இல்லாத சாலைகளை,சரியான நடைபாதைகளை அமைக்க முடியவில்லை.
'இது ராக்கெட்அறிவியல் இல்லை. நிரந்தர பராமரிப்பு செயல்முறை. தயவுசெய்து நீங்கள் துணை முதல்வர் சிவகுமாரிடம் பேசி, சுத்தமான நகரத்தை எங்களுக்கு வழங்குங்கள்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்கள் வாழ்க்கை கடினமாக உள்ளது' என்று, எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார்.
இதுகுறித்து பெங்களூரில் பிரியங்க் கார்கே அளித்த பேட்டியில், ''மோகன்தாஸ் பைக்கு ராஜ்யசபா எம்.பி., ஆக வேண்டும் என்ற ஆசை வந்து உள்ளது. இதனால் தான் எங்கள் அரசைகாரணமே இன்றி விமர்சிக்கிறார்.
அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார். மாநிலத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின், மோகன்தாஸ் பைக்கு முக்கியத்துவம் குறைந்துவிட்டது.
இப்போது அவர் சமூக ஊடக வீரராக மாறிவிட்டார். முன்பு எல்லாம் மாதத்திற்கு ஒரு முறை பேசுவார். இப்போது வாரத்திற்கு ஒரு முறை பேசுகிறார்,'' என்றார்.