பென் டிரைவ் வெளியிட உடந்தை அமைச்சர் பிரியங்க் கார்கே 'குண்டு'
பென் டிரைவ் வெளியிட உடந்தை அமைச்சர் பிரியங்க் கார்கே 'குண்டு'
ADDED : மே 19, 2024 05:05 AM

பெங்களூரு : ''மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் ஆசிர்வாதத்துடன், 'பிரஜ்வல் பென்டிரைவ்' விஷயத்தை தேவராஜே கவுடா வெளியிட்டுள்ளார்,'' என, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்தார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஹொளேநரசிபுரா தொகுதி பா.ஜ., வேட்பாளராக இருந்தவர் தேவராஜே கவுடா. இவர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் நேரடி தொடர்பில் இருந்தவர். இதனால், எம்.பி., பிரஜ்வல் தொடர்பான 'பென்டிரைவ்' அவரின் ஆசியுடன் வெளியாகி இருக்கலாம்.
இவ்விஷயத்தை வெளியிட 100 கோடி ரூபாய் பேரம் நடந்ததாக, தேவராஜே கவுடா குற்றஞ்சாட்டி உள்ளார்.
இது உண்மையாக இருந்தால், வருமான வரித்துறை, சி.பி.ஐ., அல்லது அமலாக்கத்துறைக்கு தெரிவித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் நீதிபதியிடமாவது தகவல் கொடுத்திருக்கலாம். ஆப்பரேஷன் தாமரைக்காக, பா.ஜ., 100 கோடி ரூபாய் பேரம் நடத்தி உள்ளது.
பிரஜ்வல் மீதான பாலியல் வழக்கை மறைக்க பா.ஜ. - ம.ஜ.த., சதி செய்கின்றன. இச்சம்பவத்துக்கு, தேவகவுடா குடும்பத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், தங்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

