பாகிஸ்தான் ஆதரவு கோஷம் காங்., - எம்.பி.,க்கு சம்மன்?
பாகிஸ்தான் ஆதரவு கோஷம் காங்., - எம்.பி.,க்கு சம்மன்?
ADDED : ஜூலை 06, 2024 06:14 AM

பெங்களூரு: விதான் சவுதாவில் பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பிய வழக்கில், காங்கிரஸ்எம்.எல்.சி., நசீர் உசேனுக்கு சம்மன் அனுப்புவது குறித்து போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
பெங்களூரு விதான் சவுதாவில் பிப்., 27ம் தேதி, ராஜ்யசபா எம்.பி., தேர்தல் நடந்தது.
இதில், காங்கிரசின் நசீர் உசேன் வெற்றி பெற்றார். தேர்தல் நடந்த அறையில் இருந்து வெளியே வந்த போது, அவரது ஆதரவாளர்கள், பாகிஸ்தான் ஆதரவு கோஷம் எழுப்பினர்.
இது நாடு முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள் புதுடில்லியை சேர்ந்த முகமது இல்தாஸ், ஹாவேரியின் முகமது ஷபி, பெங்களூரின் முனாவர் அகமது என, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
இவ்வழக்கு, பெங்களூரு 39வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில் நடந்து வந்தது. குற்றம் சாட்டப்பட்ட மூவருக்கும், மார்ச் 14ம் தேதி நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இவ்வழக்கை விசாரித்து வரும் போலீசார், விரைவில் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உள்ளனர்.
அதற்கு முன்னதாக, ராஜ்யசபா எம்.பி., நசீர் உசேனுக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பி, வாக்குமூலம் பதிவு செய்ய ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.