ADDED : மே 09, 2024 12:54 AM
மும்பை, மஹாராஷ்டிராவின் தலைநகர் மும்பையில் சோமையா வித்யாவிஹார் என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது. மிகவும் பிரபலமான இப்பள்ளியின் முதல்வராக பர்வீன் ஷேக் கடந்த ஏழு ஆண்டுகளாக இருந்து வந்தார்.
சமீபத்தில் இவர், தன் சமூக வலைதளத்தில் மேற்காசிய நாடான இஸ்ரேல், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மீது நடத்தி வரும் தாக்குதல் குறித்தும், இதில் பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாகவும் கருத்துக்கள் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், இக்கருத்தை மேற்கோள்காட்டி உரிய விளக்கம் அளிக்கும்படி, பள்ளி நிர்வாகம் கடந்த வாரம் மின்னஞ்சல் அனுப்பியது. எனினும், அதற்கு பர்வீன் ஷேக் எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதன் காரணமாக, அவரை பணியில் இருந்து நீக்கி அப்பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள பர்வீன் ஷேக் கூறுகையில், “என் பணி நீக்கம் முற்றிலும் சட்ட விரோதமானது. அரசியல் உள்நோக்குடன் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கருதுகிறேன்.
''இப்பள்ளியில் கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தற்போது, இதுபோன்ற நடவடிக்கை எடுத்திருப்பது நியாயமற்றது. எனவே, பள்ளி நிர்வாகத்தின் மீது சட்ட நடவடிக்கை எடுப்பது பற்றி பரிசீலித்து வருகிறேன்,” என்றார்.