வெள்ளரி பிஞ்சு சாகுபடியில் ரூ.62,000 லாபம்!: எந்த பிரச்னைக்கு என்ன சாப்ட்வேர் என்பது தெரியும்!
வெள்ளரி பிஞ்சு சாகுபடியில் ரூ.62,000 லாபம்!: எந்த பிரச்னைக்கு என்ன சாப்ட்வேர் என்பது தெரியும்!
ADDED : ஜூன் 08, 2024 11:54 PM

இயற்கை முறையில் சாத்துார் நாட்டு வெள்ளரி சாகுபடி செய்து வரும், விருதுநகர் மாவட்டம், வன்னிமடை கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பசாமி: எட்டாம் வகுப்பு வரை தான் படிச்சேன். அதன்பின், அப்பாவோடு சேர்ந்து விவசாயத்தை பார்க்க துவங்கி விட்டேன்.
என்னிடம், மொத்தம் 2 ஏக்கர் நிலம் இருக்கு. இதில் ஒரு ஏக்கரில், சாத்துார் வெள்ளரி பறிப்பில் இருக்கு. இன்னொரு ஏக்கரில், மிளகாய் பயிர் பண்ணியிருக்கேன்.
சாத்துார் வெள்ளரிக்கு என, ஒரு தனிச்சுவை உண்டு. அதுவும் நான் இயற்கை முறையில் சாகுபடி செய்வதால், கூடுதல் சுவையுடன் இருக்கும்.
பறித்து இரண்டு நாட்கள் கடந்தாலும் பசுமையாவே இருக்கும்; நீர்ச்சத்து குறையாது. வெள்ளரி சாகுபடியில் எனக்கு, 15 ஆண்டு அனுபவம் உண்டு.
ஆரம்பத்தில், ரசாயன இடுபொருட்கள் பயன்படுத்தி, இதை சாகுபடி செய்தபோது, பூச்சி, நோய்த் தாக்குதல்கள் அதிகமாக இருந்தது.
இயற்கை விவசாயத்துக்கு மாறிய பின், உற்பத்தி செலவு குறைஞ்சிருக்கு. பிஞ்சுகளை பறித்த அன்றே, விற்பனை செய்தாக வேண்டும் என்ற நிர்பந்தம் இல்லை.
இது எல்லாவற்றுக்கும் மேல், அதிக சத்துள்ள இயற்கை விளைபொருளை, ரசாயன நச்சுத்தன்மை இல்லாமல் உற்பத்தி செய்கிறோம் என்ற ஆத்ம திருப்தி கிடைக்கிறது.
விதைப்பு செய்ததில் இருந்து 45-ம் நாள், வெள்ளரிப் பிஞ்சுகள் பறிப்புக்கு வர துவங்கும். தொடர்ச்சியாக 50 - -55 நாட்கள் மகசூல் கிடைக்கும். தினமும் காலை, 6:00 மணிக்கு பிஞ்சுகள் பறிப்பது வழக்கம்.
ஒரு பறிப்புக்கு குறைஞ்சபட்சம், 1,000 பிஞ்சுகளில் இருந்து அதிகபட்சமாக, 2,500 பிஞ்சுகள் கிடைக்கும்; ஒரு பிஞ்சுக்கு, ஒரு ரூபாய் வீதம் விலை கிடைக்கும்.
துாத்துக்குடி, திருச்செந்துார், விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம், திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகள் என் தோட்டத்திற்கே வந்து, கொள்முதல் செய்து கொள்வர்; இதனால், என்னிடம் தினமும் பணம் புழங்குது.
கடந்தாண்டு, ஒரு ஏக்கரில் பயிர் செய்து, சாத்துார் நாட்டு வெள்ளரியில் 80,000 பிஞ்சுகள் மகசூல் கிடைத்தது. ஒரு பிஞ்சுக்கு ஒரு ரூபாய் வீதம், 80,000 ரூபாய் வருமானம் கிடைத்தது.
இதை தவிர, முத்தின காய்கள், பழங்கள் விற்பனை வாயிலாக, 12,000 ரூபாய் வருமானம் கிடைத்தது.
முதல் தரமான வெள்ளரி பிஞ்சுகளுக்கு மட்டும் தான், எண்ணிக்கை அடிப்படையில் விலை கிடைக்கும். இரண்டாம் தர பிஞ்சுகள் மற்றும் வெள்ளரி பழங்களைக் கூறு கட்டி விற்பனை செய்வது வழக்கம்.
கடந்தாண்டு ஒரு ஏக்கர் வெள்ளரி சாகுபடி வாயிலாக, மொத்தம் 92,000 ரூபாய் வருமானம் கிடைத்தது. உழவில் இருந்து அறுவடை வரைக்குமான எல்லா செலவுகளும் போக, 62,000 ரூபாய் லாபம் கிடைத்தது.
தொடர்புக்கு:
89405 51046.
எந்த பிரச்னைக்கு என்ன சாப்ட்வேர் என்பது தெரியும்!
சிறு, குறு
நிறுவனங்கள் பெரிய அளவில் வெற்றி அடைய உதவும் நோக்கில், சிறப்பான
தொழில்நுட்பத்தை உருவாக்கி தரும், 'பரொபெல் சாப்ட்' என்ற நிறுவனத்தை நடத்தி
வரும், திருச்சியை சேர்ந்த நோவா பி.பெலிக்ஸ்:
திருச்சி என் சொந்த
ஊர். பி.இ., முதலாம் ஆண்டு படித்தபோதே அப்பா இறந்து விட்டார். ஆனாலும்,
எங்கள் குடும்பத்துக்கு தேவையான அத்தனை விஷயங்களையும் அப்போதே செய்து
வைத்திருந்தார்.
ஆரம்பத்தில் கட்டுமான நிறுவனம் நடத்தியவர்,
பிற்பாடு லாரி சர்வீஸ் கம்பெனியை நடத்த ஆரம்பித்தார். நான் இன்ஜினியரிங்
படித்த போதே, லாரிகளை, ஆயில் டேங்கர்களாக மாற்றி, வருமானம் ஈட்டிக்
கொண்டிருந்தேன்.
தஞ்சையில் படிப்பு முடித்ததும், மும்பை
ஐ.ஐ.டி-.,யில் பைப் இன்ஜினியரிங் முடித்து, மும்பையில் ஏழெட்டு ஆண்டுகள்
தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன்.
அதன்பின் சொந்தமாக தொழில்
செய்வதற்காக, திருச்சிக்கு வந்து, ஏற்கனவே செய்த லாரி பிசினஸையே முதலில்
கையில் எடுத்தேன். லாரி ஒர்க் ஷாப், டயர் விற்பனை, டிரான்ஸ்போர்ட் என, பல
வகையான சர்வீஸ்களை தந்தேன்.
லாரி பிசினசில் அதிக லாபம் கிடைத்தது என்று சொல்வதைவிட, அதிக அனுபவம் கிடைத்தது என்று சொல்வேன்.
காரணம்,
எந்தத் தொழிலானாலும், அது ஏதோ ஒரு வகையில் டிரான்ஸ்போர்ட்டுடன்
சம்பந்தப்படும் என்பதால், பல வகையான தொழிலை செய்வோர் என்னை தேடி வருவர்.
அப்படி
வருவோர், தங்கள் தொழிலில் இருக்கும் கஷ்டங்களை மனம் விட்டு பகிர்ந்து
கொள்வர். அதில், எனக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது... ஒரு பிசினஸை
சரியாக செய்ய வேண்டுமெனில், 'சிஸ்டம் அண்டு புரொசிஜர்' கட்டாயம் தேவை
என்பது தான்.
அது சரியாக இருக்கும் பட்சத்தில், அந்த நிறுவனம்
செய்யும் பிசினசில் தோல்வி வர வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட, 'சிஸ்டம் அண்டு
புரொசிஜரை' ஒரு சாப்ட்வேர் வடிவில் உருவாக்கித் தரும் வேலையை செய்ய
வேண்டும் என்ற முடிவை எடுத்தேன்.
இதற்காக ஒரு நிறுவனத்தை துவங்கி
நடத்த ஆரம்பித்த அடுத்த ஆண்டிலேயே, கொரோனா தொற்று பரவியது. ஆயினும்,
அசராமல் ஓர் ஏரியாவில் தொற்று எப்படி பரவி வருகிறது என்ற டேட்டாவை வைத்து,
முன்கூட்டியே அலெர்ட் செய்யும் ஒரு சாப்ட்வேரை உருவாக்கினேன்; இந்த
சாப்ட்வேருக்கு, இந்திய அளவில் விருது கிடைத்தது.
எனக்கு
கம்ப்யூட்டரில் கோடிங் குறித்து பெரிதாக எதுவும் தெரியாது. ஆனால்,
பிரச்னைக்கான தீர்வை தருவதற்கு, என்ன மாதிரியான சாப்ட்வேரை உருவாக்க
வேண்டும் என்பது தெரியும். அதை, என் இன்ஜினியர்களிடம் கூறினால், அவர்கள்
அதை உருவாக்கி விடுவர்.
தற்போது என் கவனம் சிறு, குறு நிறுவனங்களின்
பிசினஸை, பல மடங்கு வளர்ச்சி காண செய்யும் சாப்ட்வேரை, பெரிய அளவில்
உருவாக்க வேண்டும் என்பதில் தான் உள்ளது.
தொடர்புக்கு:
www.propelsoft.com