UPDATED : ஆக 07, 2024 06:15 AM
ADDED : ஆக 07, 2024 05:59 AM

கர்நாடகாவில் பல்வேறு மக்கள் பிரச்னை, ஊழலை எதிர்த்து நடந்த பாதயாத்திரைகள் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஆட்சி மாற்றங்களும் நடந்துள்ளன.
கர்நாடகாவில் ஆளும் கட்சியில் ஊழல், முறைகேடு நடந்தால் எதிர்க்கட்சியினர் போராட்டம், சாலை மறியல் போன்றவற்றில் ஈடுபடுவர். தற்போது பாதயாத்திரை கலாசாரமும் சேர்ந்துள்ளது.
மாண்டியா
காங்கிரசில் எஸ்.எம்.கிருஷ்ணா முதல்வராக இருந்த போது, 2002ல், கர்நாடகா அணைகளில் தண்ணீர் தட்டுப்பாடு இருப்பதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு இல்லை என கூறி, பெங்களூரில் இருந்து மாண்டியாவுக்கு பாதயாத்திரை மேற்கொண்டார்.
அதன்பின் 2004ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனாலும், ம.ஜ.த.,வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது.
அதுபோன்று, கடந்த 2010ல் கர்நாடகாவில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த சித்தராமையா, பல்லாரியில் சட்டவிரோத சுரங்க தொழில் விவகாரத்தில் பா.ஜ.,வின் ஜனார்த்தன ரெட்டி சகோதரர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்களை, சட்டசபையில் கடுமையாக சாடினார்.
மக்கள் இயக்கம்
பெங்களூரில் இருந்து பல்லாரிக்கு 320 கி.மீ., பாதயாத்திரை மேற்கொண்டார். இந்த பாதயாத்திரை, 'மக்கள் இயக்கம்' போன்று தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதன் மூலம், ஜனார்த்தன ரெட்டி மீது வழக்கு தொடரப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். 2013ல் நடந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., தோல்வி அடைந்து, காங்கிரஸ் பெரும்பான்மையை பிடித்தது. சித்தராமையா முதல்வராக பதவியேற்றார்.
இதுபோன்று, 2012ல் பா.ஜ.,வில் இருந்து விலகிய ஸ்ரீராமுலு, பி.எஸ்.ஆர்., என்ற கட்சியை உருவாக்கினார்.
கடந்த 2013 சட்டசபை தேர்தலுக்கு முன், பீதரில் இருந்து பெங்களூரு வரை பாதயாத்திரை மேற்கொண்டார்.ஆனால், தேர்தலில் அவர் உட்பட அவரது கட்சி வேட்பாளர்கள் என நான்கு பேர் மட்டுமே வெற்றி பெற்றனர்.
அதுபோன்று, கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா மீது மூடா எனும் மைசூரு நகர்புற மேம்பாட்டு வாரியத்தில் முறைகேடு, வால்மீகி ஆணையத்தில் முறைகேடு, ஊழல் என பல குற்றச்சாட்டுகளை எதிர்க்கட்சிகளான பா.ஜ., - ம.ஜ.த., கூறி வந்தனர்.
அமைச்சர்கள் ஊழல்
முதல்வர் பதவி விலக கோரி, பெங்களூரில் இருந்து மைசூரு வரை ஆக., 3ம் தேதி பாதயாத்திரையை துவக்கி உள்ளனர்.
பாதயாத்திரையின் போது, காங்கிரஸ் அமைச்சர்களின் ஊழல் குறித்து பேசி வருகின்றனர். பதிலுக்கு காங்கிரசாரும், 'மக்கள் இயக்கம்' கூட்டம் நடத்தி, பா.ஜ., - ம.ஜ.த.,வின் ஊழல் குறித்து மக்களிடம் கூறி வருகின்றனர்.
பா.ஜ., - ம.ஜ.த.,வின் பாதயாத்திரைக்கு வெற்றி கிட்டுமா என்பது, வரும் நாட்களில் தெரியவரும்
.- நமது நிருபர் -