உண்மை சரிபார்ப்பு பிரிவுக்கான மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை
உண்மை சரிபார்ப்பு பிரிவுக்கான மத்திய அரசின் அறிவிப்புக்கு தடை
ADDED : மார் 22, 2024 02:09 AM
புதுடில்லி, மத்திய அரசு குறித்த போலி செய்திகளை கண்டறிய, பி.ஐ.பி.,யின் கீழ் உண்மை சரிபார்ப்பு பிரிவை அமைப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்கு, உச்ச நீதிமன்றம் நேற்று தடை விதித்தது.
தகவல் தொழில்நுட்ப விதி 2021ல், பல்வேறு திருத்தங்களை செய்த மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், கடந்த ஆண்டு ஏப்ரலில் புதிய விதிகளை வெளியிட்டது.
நடவடிக்கை
அந்த புதிய விதிகளின்படி, இணையதளங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் மத்திய அரசு குறித்து வெளியாகும் செய்திகளின் உண்மை தன்மையை சரிபார்க்க குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது.
அந்த பிரிவு கண்டறியும் போலி செய்திகள் குறித்து, சம்பந்தப்பட்ட சமூக வலைதள நிறுவனங்களுக்கு தகவல் அளிக்கப்படும். உடனடியாக அந்த போலி செய்திகளை அந்நிறுவனங்கள் அகற்ற வேண்டும். இல்லையெனில், அந்நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த உண்மை சரிபார்ப்பு பிரிவு, பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை ஒடுக்கும் செயல் எனக்கூறி, நகைச்சுவை பேச்சாளர் குணால் கம்ரா மற்றும் இந்திய எடிட்டர்ஸ் கில்டு அமைப்பு, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், உண்மை சரிபார்ப்பு பிரிவை அமைக்க இடைக்கால தடை விதிக்க மறுத்தது.
இதை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதற்கிடையில், பி.ஐ.பி., எனப்படும் பத்திரிகை தகவல் அமைப்பின் கீழ், உண்மை சரிபார்ப்பு பிரிவை அமைக்கும் அறிவிப்பை மத்திய அரசு நேற்று முன்தினம் வெளியிட்டது. இது தொடர்பான மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
உண்மை சரிபார்ப்பு
அப்போது, மத்திய அரசு குறித்து சமூக ஊடகங்களில் வரும் போலியான மற்றும் தவறான தகவல்களை கண்டறிய, திருத்தப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் உண்மை சரிபார்ப்பு பிரிவை அமைப்பது தொடர்பான மத்திய அரசின் அறிவிப்புக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.
இந்த வழக்கில், மும்பை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

